விஜயகாந்துக்கு சளி, இரும்மல்- தொடர் சிகிச்சை
1 min read
Suffering from cough-cold problem: Continued treatment for Vijayakanth
19.11.2023
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு நேற்று மாலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடுமையான சளி மற்றும் இருமலால் அவர் அவதிப்பட்டார். இதனால் மூச்சு விடுவதிலும் அவருக்கு சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் விஜயகாந்த் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். உடல் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதில் விஜயகாந்துக்கு சளி தொல்லை சீராவதற்கு கூடுதல் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் எனவே அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
இதன்படி விஜயகாந்த் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். சளி மற்றும் இருமல் பிரச்சனையை சரி செய்வதற்காக விஜயகாந்துக்கு டாக்டர்கள் மருந்து மாத்திரைகளை கொடுத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இன்று இரவும் விஜயகாந்த் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்தே சிகிச்சை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிகிச்சை முடிந்த பிறகு அவர் நாளை வீடு திரும்ப வாய்ப்பு இருப்பதாக கட்சியினர் தெரிவித்து உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே விஜயகாந்த் உடல்நலக்குறைவால் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். குரல் மங்கியும் எழுந்து நிற்க முடியாமலும் விஜயகாந்த் உள்ளார்.
இந்த நிலையில் விஜயகாந்தின் உடல்நிலை பற்றி தவறான தகவல்கள் பரவின. இதையடுத்து தே.மு.தி.க. சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.