நெல்லையில் வ.உ.சி. மணிமண்டபத்தில் இருதரப்பினரிடையே மோதல்- போலீஸ் தடியடி
1 min read
VUC in rice Clash between two parties in Mani Mandapam- police baton
19.11.2023
சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் 87-வது குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி நெல்லை மாநகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள மணி மண்டபத்தில் அமைந்துள்ள அவரது முழு உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதன் ஒரு பகுதியாக நேற்று மாலை 7 மணியளவில் ஒரு அமைப்பின் மகளிர் அணியின் மாநில நிர்வாகிகளான மதுரையை சேர்ந்த 2 பெண்கள் தங்களது ஆதரவா ளர்களுடன் மாலை அணிவிக்க வந்திருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் 2 பேரின் ஆதரவாளர்களும் கைகலப்பில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதோடு அங்கிருந்த கார்களை அடித்து நொறுக்கினர்.
இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். ஒரு கட்டத்தில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பட்டாலியன் போலீசுக்கு காயம் ஏற்பட்டதாகவும், அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் 2 தரப்பினரும் சந்திப்பு போலீஸ் நிலையத்தில் மாறி மாறி புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.