பிணைக் கைதிகளை விடுவிக்க ஏதுவாக காசாவில் 4 நாட்கள் போர் நிறுத்தம்
1 min read
4-day ceasefire in Gaza to allow release of hostages
22/11/2023
பிணைக் கைதிகளை விடுவிக்க ஏதுவாக காசாவில் 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்வதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
போர்
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 1200 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து இஸ்ரேல் நடத்திய போரில் இதுவரை 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரழந்துள்ளனர். இந்தப் போர் 40 நாட்களைக் கடந்து நடந்துவருகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் அரசு முதன்முறையாக காசாவில் 4 நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 50 பிணைக் கைதிகளை ஹமாஸ் குழுவினர் விடுவிப்பார்கள் என்று இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் இது போர் நிறுத்தம் இல்லை என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெளிவுபடுத்தியுள்ளார். இது பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் மட்டுமே. போர்க்கால அமைச்சரவை கூடி இந்த முடிவை எடுத்துள்ளது என்று அவர் கூறினார். மேலும் ஹமாஸ் அழியும் வரை போர் தொடரும். ஹமாஸை முழுவதுமாக அழித்து, பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவித்து இஸ்ரேலை அச்சுறுத்தும் சக்தி ஏதும் காசாவில் இல்லை என்பதை உறுதி செய்வதே எங்களின் இலக்கு என்றும் பிரதமர் பெஞ்சமின் கூறியுள்ளார்.
முன்னதாக நேற்று, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh), “இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது” என டெலிகிராமில் தெரிவித்திருந்தார். கத்தார் இருதரப்புகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இரண்டு தரப்பிலும் சுமுக முடிவு விரையில் எட்டப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இஸ்ரேல் 5 நாள் போர் நிறுத்தமும், தெற்கு காசா உட்பட காசாவின் பகுதிகளில் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதலை நிறுத்தவும் அந்த பேச்சுவார்த்தையில் கேட்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், இஸ்ரேல் காசாவில் 4 நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஐ.நா., உலக சுகாதார நிறுவனம், உலக நாடுகள் எனப் பல தரப்பிலும் முன்வக்கப்பட்ட கோரிக்கை தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.