சுரங்கத்துக்குள் சிக்கிய 41 தொழிலாளர்கள் நாளைக்குள் மீட்கப்பட வாய்ப்பு
1 min read
41 workers trapped in the mine are likely to be rescued by tomorrow
22.11.2023
உத்தராகண்ட் மாநில சுரங்க விபத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு மசாலா, எண்ணெய் பயன்பாட்டை குறைத்து வெஜ் புலாவ், பட்டர் சப்பாத்தி மற்றும் மட்டர் பனீர் வழங்கப்பட்டுள்ளது. டெலிஸ்கோப்பிங் முறையில் துளையிடும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்பு படையினர், இன்று அல்லது நாளைக்குள் நல்ல செய்தி வரும் என்று தெரிவித்துள்ளனர்.
உத்தராகண்ட் மாநிலம் சில்க்யாரா அருகே கடந்த 12ஆம் தேதி அதிகாலையில் சுரங்கப்பாதை இடிந்து விபத்துக்குள்ளானதில் 41 பேர் சிக்கினர். தொழிலாளர்களின் நிலை என்ன என்று தெரியாதிருந்த நிலையில், 9 நாட்களுக்கு பிறகு தொழிலாளர்கள் நலமுடன் இருக்கும் வீடியோ நேற்று வெளியானதை அடுத்து, குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து 11ஆம் நாளாக மீட்பு பணியில் நடைபெற்று வருகிறது.
எண்டோஸ்கோப்பி மூலம் தொழிலாளர்களின் நிலை கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், தொழிலாளர்கள் தாங்கள் நலமுடன் இருப்பதாகவும், தங்களை எண்ணி குடும்பத்தினர் அச்சப்பட வேண்டாம் என்றும் மொபைல் மூலம் பேசியது பதிவு செய்யப்பட்டு, அவர்களின் குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்ட 6 இன்ச் குழாய் வழியாக திங்கள் கிழமை இரவு முதல் சூடான திட உணவுகளை வழங்கி வரும் மீட்பு படையினர், நேற்று இரவு முதல்முறையாக அரிசியில் தயாரிக்கப்பட்ட வெஜ் புலாவ், பட்டர் சப்பாத்தி மற்றும் மட்டர் பனீர் ஆகியவற்றை வழங்கினர். தொழிலாளர்களின் ஆரோக்கியம் மற்றும் செரிமானம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மசாலா மற்றும் எண்ணெய் பயன்பாட்டை குறைத்து உணவு தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
டெலிஸ்கோப்பிங் முறையில் 800 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட குழாய் அமைக்க முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். எல்லாம் சரியாக நடந்தால் இன்றுக்குள் அனைவரும் மீட்கப்படுவார்கள் என்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொத்தம் உள்ள 57 மீட்டரில் 44 மீட்டர் தூரத்துக்கு மலையை குடைந்து மாற்று பாதையில் செல்ல பணிகள் நடக்கிறது. மீதம் ்உள்ள 13 மீட்டர் தூரத்தை இன்னும் சில மணி நேரத்தில் தோண்டி விடலாம் என்றும் இன்று காலைக்குள் அனைவரும் மீட்கப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.