July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

சந்திரயான்-4 அடுத்த 2 ஆண்டுகளில் சோதனை-5 ஆண்டுகளில் இலக்கை அடைய இஸ்ரோ திட்டம்

1 min read

Chandrayaan-4 will be tested in next 2 years- ISRO plans to achieve the target in 5 years

22.11.2023
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) நிலவுத்திட்டமான சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து, சந்திரயான்-4 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தயாராகி வருகிறது. ஜப்பானுடன் சேர்ந்து சந்திரயான்-4 திட்டத்தைச் செயல்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்தில் ரோபோட் தொழில்நுட்பத்திலான ரோவர் மற்றும் லேண்டரை நிலவுக்கு அனுப்பி ஆய்வு செய்வதுடன், அதன் மேற்பரப்பில் உள்ள மண் அல்லது பாறை மாதிரிகளை சேகரித்து பூமிக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலர் கூறியதாவது:-
சந்திரயான்-4 திட்டத்தில் லேண்டரை இந்தியாவும், ரோவரை ஜப்பானும் வடிவமைக்க உள்ளன. இவற்றின் ஆயுட் காலம் 6 மாதங்களாகும். இது முந்தைய திட்டங்களைவிட சவாலானதாகும். ஏனெனில், விண்கலத்தை நிலவில் தரையிறக்கி மாதிரிகளைச் சேகரித்து, பின்னர் மீண்டும் பூமிக்குக் கொண்டு வர வேண்டும். இதற்காக 4 விதமான கலன்கள் விண்கலத்தில் இணைக்கப்பட உள்ளன. மேலும், அதிலுள்ள ரோவரின் எடை மட்டும் 350 கிலோ ஆகும். ரோவரில் நிலவின் மேற்பரப்பில் துளையிட வசதியாக நவீன இயந்திரங்கள் இடம்பெறும். இதன்மூலம் நிலவில் உள்ள மண் அல்லது பாறைத் துகள்கள், நீர் மூலக்கூறுகள் போன்ற மாதிரிகளை எளிதாகச் சேகரிக்க முடியும்.

சந்திரயான்-3 திட்டத்தில் இடம்பெற்ற ரோவர் நிலவின் மேற்பரப்பில் 500 மீட்டர் சுற்றளவில்தான் வலம் வந்து ஆய்வு செய்தது. ஆனால், சந்திரயான் 4-ல் அனுப்பவுள்ள ரோவர் அதிகபட்சம் ஒரு கிலோ மீட்டர் ஊர்ந்து சென்று ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. அனைத்து பணிகளையும் முடித்து அடுத்த 2 ஆண்டுகளுக்குள் இந்த திட்டத்துக்கான முதற்கட்ட சோதனையை நடத்தி முடிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. நிலவின் இருள் நிறைந்த தென்துருவப் பகுதிகளை முழுமையாக ஆராய்வதே சந்திரயான்-4 திட்டத்தின் நோக்கமாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நிலவில் இருந்து பாறை அல்லது மண் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வரும் இந்த சவாலான பணியை அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் தங்களால் செய்ய முடியும் என்று இஸ்ரோவின் விண்வெளி பயன்பாட்டு மைய (எஸ்ஏசி) இயக்குனர் நிலேஷ் தேசாய் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.