ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு
1 min read
Rajasthan Assembly Election Polling
25.11.2023
ராஜஸ்தான் மாநிலத்தில் 200 தொகுதிகளை கொண்ட சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.
ஸ்ரீகங்கா நகர் கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால், இந்த ஒரு தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. அந்த தொகுதியில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக வாக்களித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவுகள் நிறைவடைந்தது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ந்தேதி நடைபெற இருக்கிறது.
ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் 1 மணி நிலவரப்படி, 40.27 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.
வாக்குப்பதிவின் முதல் இரண்டு மணி நேரத்தில் கிட்டத்தட்ட 10 சதவீத வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்திருந்தனர். காலை 11 மணிக்குள் அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 25 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து, 3 மணி நிலவரப்படி 55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. பின்னர், 5 மணி நிலவரப்படி 68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அவரது ஆட்சியின் 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 14-ந்தேதி நிறைவு பெறுகிறது. இதையடுத்து ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடத்தும் அறிவிப்பை கடந்த அக்டோபர் மாதம் 30-ந்தேதி தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 200 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் அட்டவணைப்படி அங்கு 200 சட்டசபை தொகுதிகளிலும் கடந்த மாதம் 30-ந்தேதி வேட்பு மனு தாக்கல் ஆரம்பித்தது.
கடந்த 6-ந்தேதி மனுதாக்கல் முடிந்தது. மறுநாள் 7-ந்தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்பட்ட பிறகு 200 தொகுதிகளிலும் 1875 பேர் களத்தில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த வேட்பாளர்களில் 183 பேர் பெண் வேட்பாளர்கள்.