புளியங்குடியில் போலீசாரை கத்தியால் குத்த முயன்ற 6 பேர் கைது
1 min read
6 people arrested for trying to stab the police in Buliangudi
26.11.2023
தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் பொதுமக்களிடம் தகராறு செய்த கும்பலை தட்டிக்கேட்ட போலீசாரை கத்தியால் குத்த முயற்சி செய்து விட்டு தப்பி ஓடிய 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி சோதனை சாவடி அருகே காரை நிறுத்திவிட்டு பொதுமக்களிடம் தகராறு செய்து கொண்டிருந்த கும்பல் பற்றி தகவல் அறிந்த ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உதவியாளர் ஆய்வாளர் சஞ்சய் காந்தி ஆகியோர் விரைந்து சென்று அந்த கும்பலை பிடிக்க முயற்சித்த போது அவர்கள் போலீசாரை கத்தியால் குத்த முயற்சி செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது பற்றி புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் வாசுதேவநல்லூர் அருகே உள்ள உள்ளாறு பகுதியில் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான போலீசார் அந்த காரை வழிமறித்து காரில் இருந்த 6 பேர்களையும் பிடித்து அவர்களிடமிருந்து மூன்று கத்திகளையும் பறிமுதல் செய்தனர் மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர்கள் சிவகிரியைச் சேர்ந்த ராமர் என்பவர் மகன் கனகராஜ் (வயது 21) உள்ளாறு பன்னீர்செல்வம் மகன் செந்தமிழ்ச்செல்வன் (வயது 23) சிவகிரி சுப்பிரமணியன் மகன் சுனில் குமார் (வயது 25) கனகராஜ் என்பவரது மகன் சதீஷ் ஆனந்த் (வயது 21) மற்றும் இரண்டு பேர் 17 வயதுக்குட்பட்ட சிறியவர்கள் என்பதும் தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.