உச்ச நீதிமன்றத்தில் 7-அடி உயர அம்பேத்கர் சிலை-ஜனாதிபதி திறந்து வைத்தார்
1 min read
7-feet tall statue of Ambedkar in the Supreme Court- The President opened
26.11.2023
இந்திய ஜனநாயகத்தை வழிநடத்தும் அரசியலமைப்பு சட்டம் அரசியல் நிர்ணய சபையால் உருவாக்கப்பட்டு 1949, நவம்பர் 26 அன்று இந்திய பாராளுமன்றத்தால் ஏற்கப்பட்டது.
இதையொட்டி, 2015லிருந்து ஆண்டுதோறும் நவம்பர் 26, அரசியலமைப்பு தினம் என நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இன்று நாடு முழுவதும், அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அரசியல் நிர்ணய குழுவின் தலைவரான டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் உயரிய சித்தாந்தங்களும், கோட்பாடுகளும் மக்களால் நினைவுகூரப்படும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இதன் தொடர்ச்சியாக, இன்று இந்திய நீதித்துறையின் தலைமையிடமாக விளங்கும் உச்ச நீதிமன்ற வளாகத்தில் டாக்டர். பி.ஆர். அம்பேத்கரின் 7 அடி உயர சிலை இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதியுடன், இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அம்பேத்கர், வழக்கறிஞர் உடையுடன் தனது கையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வைத்து கொண்டிருப்பதை போல் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம், பல உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சிலை ஒன்றை நீதிமன்ற வளாகத்தில் நிறுவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்து கடிதம் சமர்ப்பித்திருந்ததை அடுத்து உடனடியாக இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகளின் பயனாக இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.