திருவண்ணாமலை 2668 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது
1 min read
Mahadeepam is installed on the 2668 feet high hill of Thiruvannamalai
26.11.2023
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவையட்டி கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபம் இன்று ஏற்றப்பட்டது. 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீப தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த கடந்த 17-ம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெற்று வந்தது. விழாவின் 7ம் நாளன்று மகா தேர் எனும் அண்ணாமலையார் தேரோட்டம் நடந்தது. இதில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் விழாவின் உச்சகட்ட திருவிழாவான 10ம் நாள் விழாவான மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை 2 மணியளவில் அண்ணாமலையார கோயில் நடைதிறக்கப்பட்டு உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையாருக்கு பால், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அண்ணாமலையாருக்கு வைரகிரீடம் மற்றும் தங்ககவசம், உண்ணாமலையம்மனுக்கு தங்க கவசமும் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் அண்ணாமலையார் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத, அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பஞ்சபூதங்களை அரசாளும் ஏகனாக இருக்கும் இறைவன் அநேகனாகி (பஞ்சமூர்த்திகளாகி) படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய 5 தொழில்களை செய்கிறார் என்பதை விளக்கும் வகையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
அப்போது கோயில் மற்றும் வெளியே திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி முழக்கத்துடன் தரிசனம் செய்தனர்.
பின்னர் பரணி தீபமானது. ஓடல், எக்காளம் முழங்க அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது. அதன்பின் பரணி தீபம் கால பைரவர் சன்னதியில் காலை 11 மணி வரை வைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு பரணி தீபம் பர்வத ராஜகுலத்தினரால் மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
மலையில் மகாதீபம் ஏற்றுவதை காண்பதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்திருந்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். பிற்பகல் 2 மணிமுதல் பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக சுவாமி சன்னதியில் இருந்து வெளியே வந்து கிளிகோபுரம் அருகிலுள்ள மண்டபத்தில் எழுந்தருளினர்.
சரியாக 5.55 மணி அளவில் ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் ஆடியபடியே வெளியே வந்தார். அர்த்தநாரீஸ்வரர் வெளியே வந்ததும் மாலை 6 மணிக்கு கோயில் தங்க கொடி மரம் முன்புள்ள அகண்ட தீபத்தில் தீபம் ஏற்றப்பட்டது.
அதே நேரத்தில் கோயிலின் பின்புறமுள்ள 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ராட்சத கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
அப்போது கோயிலுக்கு வெளியேயும் குவிந்திருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என விண்ணதிர கோஷங்களை எழுப்பினர்.
மலை உச்சியில் தீபம் ஏற்றியதும் நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் காத்திருந்த பக்தர்கள் தங்களது வீடுகளில் தீபம் ஏற்றினர் ஆங்காங்கே வானவேடிக்கையும் நடந்தது. திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலுள்ள பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களிலும் அகவல்விளக்குகள் ஏற்றி மலையை நோக்கி வழிபட்டனர். அப்போது மகாதீபதிருவிழாவையொட்டி திருவண்ணாமலை நகரமே ஒளிவெள்ளத்தில் காட்சி அளித்தது.
மகாதீபத்தை காண 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்தனர். இந்தவிழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, உள்துறை செயலாளர் அமுதா, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உள்பட முக்கிய பிரமுகர்கள் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பக்தர்களின் பாதுகாப்பிற்காக மலை மீது கமாண்டோ படையினரும், கோயிலிலும், நகரிலும், சுற்றுப்புற பகுதியிலும் 14ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பக்தர்களின் வசதிக்காக 13 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு 2,700 சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்டன. இதேபோல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. கார்த்திகை தீபத்தையொட்டி கிரிவல பாதையிலுள்ள அஷ்டலிங்கங்களையும் வழிபட்டதோடு திருநேர் அண்ணாமலை ஆதிஅண்ணாமலை ஆகிய சன்னதிகளிலும் கிரிவலம் சென்ற பக்தர்கள் வழிபட்டனர்.
மேலும் கிரிவல பாதை மற்றும் கோவில் பகுதிகளிலும் ஆசிரமங்களிலும் ஆன்மீக அமைப்புகள் சார்பிலும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.
நாளை 27ந் தேதி பவுர்ணமி என்பதால் மகாதீபத்தைகாணவந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து கோயிலில் மண்டபம் முன்பு எழுந்தருளியுள்ள பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெற்றது. பின்னர் நள்ளிரவு பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்தில் மாடவீதியுலா வந்தனர்.
நதடிள 27ந் தேதி சந்திரசேகரர் தெப்ப உற்சவமும், 28ந் தேதி பராசக்தி அம்மன் தெப்ப உற்சவமும், 29ந் தேதி சுப்பிரமணியர் தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது. தொடர்ந்து சண்டிகேஸ்வரர் வெள்ளி வாகன உற்சவத்துடன் தீபத்திருவிழா நிறைவு பெறுகிறது.