உத்தரகாண்ட் சுரங்கப்பாதை-இயந்திர பிளேடுகள் சிக்கிக் கொண்டதால் மீட்பு பணியில் மீண்டும் பின்னடைவு
1 min read
Uttarakhand tunnel-Mechanical blades get stuck, another setback in rescue operation
26.11.2023
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காஷியில் சுரங்கம் தோண்டும் பணியின் போது திடீரென ஏற்பட்ட விபத்தால் சுரங்கத்தின் ஒரு பகுதி மூடியது. இதன் காரணமாக அங்கு பணியில் ஈடுபட்டு வந்த 41 தொழிலாளர்களும் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர்.
தற்போது வரை சுரங்கத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான உணவு அதற்கென உருவாக்கப்பட்ட குழாய் மூலம் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. மீட்பு பணிகளின் போது பல்வேறு இடர்பாடுகளால் அடிக்கடி இடையூறு ஏற்படுகிறது. அந்த வகையில், சுரங்கத்திற்குள் துளையிடுவதற்காக அமெரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆகர் இயந்திரம் மூலம் துளையிடும் பணிகள் நேற்று (நவம்பர் 25) துவங்கின.
எனினும், ஆகர் இயந்திர பிளேடுகள் சிக்கிக் கொண்டதால் சுரங்கத்திற்குள் இருக்கும் 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகளில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது. இதன் காரணமாக துளையிடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
“சுரங்கத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் ஆகர் இயந்திர பிளேடுகளை வெட்டி அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆகர் இயந்திரத்தின் 16 மீட்டர்கள் வரை வெட்டி அகற்றப்பட வேண்டும். பிளாஸ்மா கட்டர் இயந்திம் மூலம் வெட்டி எடுக்கப்படுவதால், ஆகர் இயந்திர பிளேடுகளை வேகமாக அகற்ற முடியும்,” என்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் சுரங்க நிபுணரான க்ரிஸ் கூப்பர் தெரிவித்து இருக்கிறார்.
“இந்த பணிகள் முழுமையாக நிறைவு பெற நீண்ட காலம் ஆகிவிடும். மலை பகுதியில் பணியாற்றும் போது, எதையும் கணிக்கவே முடியாது. நாங்கள் இதுதொடர்பான பணிகள் நிறைவடைவது குறித்து எந்த கணிப்பையும் தெரிவிக்கவில்லை,” என்று தேசிய பேரிடர் நிர்வாக கூட்டமைப்பின் உறுப்பினரான சையத் அடா ஹசைன் தெரிவித்து உள்ளார்.
சுரங்கம் உருவாக்குவதில் சர்வதேச நிபுணரான ஆர்னால்டு டிக்ஸ், சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் மீட்க முடியும் என்று தெரிவித்து இருக்கிறார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலம் இருப்பதை அடுத்து, இவரின் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.