மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்காரில் ஆட்சியை பிடித்தது பாஜக.- தெலுங்கானாவை காங். கைப்பற்றியது
1 min read
BJP took power in Madhya Pradesh, Rajasthan and Chhattisgarh.- Congress in Telangana. captured
3/12/2023
மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் சட்டசபை தேர்தலில் அபார வெற்றிபெற்று பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. அதேவேளை, தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது.
5 மாநில தேர்தல்
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்தது. மிசோரமில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில் முதல்கட்டாக 20 தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 7-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது.
இதன் தொடர்ச்சியாக சத்தீஸ்கரில் 2-வது கட்டமாக 70 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 230 தொகுதிகளுக்கும் நவம்பர் 17-ந்தேதி தேர்தல் நடந்தது.
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளது. இதில் ஒரு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால் மீதமுள்ள 199 தொகுதிகளில் கடந்த 25-ந்தேதியும், தெலுங்கானாவில் 119 தொகுதிகளில் 30-ந்தேதியும் ஓட்டுப்பதிவு நடந்தது.
மத்திய பிரதேசத்தில் 76.22 சதவீதமும், ராஜஸ்தானில் 73.92 சதவீதமும், தெலுங்கானாவில் 71.34 சதவீதமும், மிசோரமில் 77.04 சதவீதமும், சத்தீஸ்கரில் 76.31 சதவீதமும் ஓட்டுக்கள் பதிவானது.
வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எந்திரங்கள் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. ஓட்டு எந்திரங்களுக்கு 24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ஓட்டு எண்ணிக்கை
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. பின்னர் ஓட்டு எந்திரத்தில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி தொடங்கியது.
பாஜக வெற்றி
இதில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான். சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக வெற்றிபெற்றது. தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
230 தொகுதிகளை கொண்ட மத்தியபிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மைக்கு 116 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். அம்மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
தற்போது நடந்த தேர்தலிலும் அதிக தொகுதிகளை கைப்பற்றி பாஜக தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றிபெற்றுள்ளது.
4 தொகுதிகளிலும் இன்று மதியம் முன்னணி நிலவரம் வருமாறு:
இந்த மாநிலத்தில் மொத்த தொகுதி – 230 பெரும்பான்மைக்கு தேவை – 116
பாஜக – 163
காங்கிரஸ் – 64
பகுஜன் சமாஜ் – 2
மற்றவை – 1
ராஜஸ்தான்
200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் 199 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மைக்கு 100 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். அம்மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றி பாஜக தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றிபெற்றுள்ளது.
மொத்த தொகுதி – 199 பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகள் – 100
பாஜக – 109
காங்கிரஸ் – 74
பகுஜன் சமாஜ் – 2
மற்றவை – 14
இந்த மாநிலத்தில் காங்கிரஸ் வசம் இருந்த ஆட்சியை பாஜக கைப்பற்றியது.
சத்தீஷ்கார்
90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்கார் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. இம்மாநிலத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 46 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். சத்தீஷ்காரில் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இப்போது நடந்த தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றி பாஜக தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றிபெற்றுள்ளது.
மொத்த தொகுதி – 90 பெரும்பான்மைக்கு கிடைக்க வேண்டிய தொகுதிகள் – 46
பாஜக – 53
காங்கிரஸ் – 34
பகுஜன் சமாஜ் – 2
மற்றவை – 1
இந்த மாநிலத்திலும் காங்கிரஸ் வசம் இருந்த ஆட்சியை பாஜக கைப்பற்றி உள்ளது.
தெலுங்கானா
119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க 60 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். அம்மாநிலத்தில் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றிபெற்றுள்ளது.
மொத்த தொகுதி – 119 பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகள் – 60
காங்கிரஸ் – 65
பாஜக – 9
பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) – 41
ஏஐஎம்ஐஎம் – 4
மற்றவை – 0
இந்த மாநிலத்தில் பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) வசம் இருந்த ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
6 மணி நிலவரம்
மாலை 6 மணி நிலவரப்படி, 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் பாஜக 15 இடங்களில் வெற்றியடைந்து, மேலும் 40 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 8 தொகுதிகளில் வெற்றிபெற்று, 27 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்தில் பாஜக 77 தொகுதிகளில் வெற்றியும், 87 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளது. காங்கிரஸ் 18 இடங்களில் வெற்றியும், 47 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளது.
199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற ராஜஸ்தானில் பாஜக 99 இடங்களில் வெற்றியடைந்து, 16 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. 56 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி 12 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில் காங்கிரஸ் 41 இடங்களில் வெற்றிபெற்று, 23 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பிஆர்எஸ் கட்சி 17 இடங்களில் வெற்றிபெற்று, 22 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 4 தொகுதிகளில் வெற்றியடைந்துள்ள பாஜக 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது.