July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

2 தொழிலாளர்களின் உடல்கள் 4 நாட்களுக்கு பின் மீட்பு

1 min read

The bodies of 2 workers were recovered after 4 days

8.12.2023

சென்னை வேளச்சேரியில் கட்டுமான நிறுவனம் தோண்டிய ராட்சத பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

்நேற்று காலை தொழிலாளி நரேஸ் உடல் மீட்கப்பட்டது. இன்று (வெள்ளி) மதியம் 2 மணியளவில் மீட்கப்பட்டது. சடலத்தை பெட்டியில் வைத்து பேரிடர் மீட்புக் குழுவினர் வெளியே கொண்டுவந்தனர். சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இருவர் உடல்களை பார்த்த உறவினர்கள் கண்ணீர் விட்டநர்.

முன்னதாக, மீட்புக் குழுவில் ஈடுபட்ட நபர் ஒருவர் அளித்த பேட்டியில், ”பள்ளத்தில் மீட்புப் பணிகளுக்கான நாங்கள் வந்தபோது எங்களிடம் இரண்டு சடலங்கள் இருக்கலாம் என்று கூறினர். அதன்படி ராட்சத பம்புகள் மூலம் தண்ணீரை வெளியேற்றி நாங்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டோம். இரண்டு சடலங்களையும் மீட்டுள்ளோம். சடலங்கள் அழுகிய நிலையில் இருந்தன. இத்துடன் மீட்புப் பணி முழுமையாக முடித்துவிட்டதாகச் சொல்ல முடியாது. அந்தப் பள்ளம் குறித்து அடுத்து எங்களுக்கு வரும் அறிவுரைகளின்படியே அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என்றார்.

இதனிடையே, இந்த விபத்துக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அடித்தளத்தை வலுவாக அமைக்காமல் கட்டுமானப் பணி மேற்கொண்டதாலேயே இந்த விபத்து நடந்திருப்பதாக அறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

விபத்து நடந்தது எப்படி? – சென்னை கிண்டி 5 பர்லாங் சாலை – வேளச்சேரி சாலை இணைப்பில் கட்டுமான வேலைக்காக தனியார் நிறுவனம் சார்பில் சுமார் 50 அடி ஆழத்துக்கும் மேல் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. தொழிலாளர்கள் தங்கி பணி செய்வதற்கு வசதியாக, அருகே கேரவன் போன்ற கன்டெய்னர் வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக, தொழிலாளர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

கடந்த 3-ம் தேதி முதலே சென்னையில் பலத்த புயல் காற்றுடன், கனமழை கொட்டிய நிலையில், 4-ம் தேதி அதிகாலை கட்டுமான நிறுவனம் தோண்டியிருந்த ராட்சத பள்ளத்தின் பக்கவாட்டில் மழை நீரால் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில், அருகே இருந்த பெட்ரோல் பங்க்கின் தற்காலிக ஜெனரேட்டர் அறை, தொழிலாளர்கள் தங்கும் கன்டெய்னர் வாகனம் ஆகியவையும் அந்த பள்ளத்தில் சரிந்து மூழ்கின.

இதில், மழை பாதிப்புகளை பார்வையிட வந்த கட்டுமான நிறுவனத்தின் பணிதள பொறியாளரான (‘சைட் இன்ஜினீயர்’) வேளச்சேரி ஜெயசீலன் (29), பெட்ரோல் பங்க்கின் ஜெனரேட்டர் அறையில் இருந்த ஊழியரான வேளச்சேரி விஜயநகரை சேர்ந்த நரேஷ் (24) உட்பட அப்பகுதியில் இருந்த 5 ஊழியர்கள் ராட்சத பள்ளத்தில் விழுந்தனர்.

அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸார் ஓடிவந்து, பள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய 3 ஊழியர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர். ஜெயசீலன், நரேஷ் ஆகிய இருவரும் தண்ணீருக்குள் மூழ்கினர். அவர்களை மீட்கும் பணி 4-வது நாளாக நேற்றும் நடந்தது. என்எல்சி நிறுவனத்திடம் இருந்து ராட்சத பம்ப் வரவழைக்கப்பட்டு, தண்ணீரை விரைந்து வடியவைப்பதற்கான பணி தீவிரமாக நடந்தது. இந்நிலையில் நரேஷின் உடல் நேற்று காலை மீட்கப்பட்டது. மற்றொருவரான ஜெயசீலனின்உடலும் மீட்கப்பட்டுள்ளது.

ஜெயசீலனுக்கு திருமணமாகி 11 மாதம்தான் ஆகிறது. அவரது மனைவி மஞ்சு இரண்டரை மாத கர்ப்பமாக உள்ளார். கணவர் நீருக்குள் மூழ்கிய தகவல் அறிந்து அங்கு வந்த மஞ்சு,5 நாட்களாக அழுதபடி அங்கேயே இருந்து வந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

கிண்டி பகுதியில் இருந்து பெருக்கெடுத்து வந்த மழைநீர், கட்டுமான நிறுவனம் தோண்டி வைத்த ராட்சத பள்ளத்தில் வேகமாக பாய்ந்தது. இதனால் திடீரென மண் சரிவு ஏற்பட்டதாலேயே கன்டெய்னர், பெட்ரோல் பங்க்கின் முன்பகுதி ஆகியவை உள்ளே விழுந்து நீருக்கடியில் புதைந்தன என்று தீயணைப்பு துறையினர் கூறினர். ‘‘விபத்து நடந்த இடத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும், அதிகாரிகளும் நேரில் வந்துஆய்வு செய்தும் மீட்பு பணி துரிதப்படுத்தப்படவில்லை’’ என்று கூறி மறியலிலும் ஈடுபட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.