மிச்சாங் புயல் பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 6000 நிவாரணம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
1 min read
Michang Cyclone Victims Rs. 6000 Relief – Govt Notification
9.12.2023
மிச்சாங் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு என நான்கு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி சென்னை இன்னும் முழுமையாக மீளாத சூழலே நிலவுகிறது. வெள்ளம் காரணமாக கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், மிச்சாங் புயல் வெள்ளத்திற்கு ரூ. 6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்து இருக்கிறது. மிச்சாங் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6 ஆயிரம் வழங்குவதோடு, இதர நிவாரண உதவி தொகைகளும் உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.
மிச்சாங் நிவாரண தொகை ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக வழங்கப்படும். புயல் வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும். சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ. 8 ஆயிரம் வழங்கப்படும். எருது, பசு உயிரிழப்புகளுக்கு ரூ. 37 ஆயிரத்து 500 வரை நிவாரணம் வழங்கப்படும்.
ஆடுகள் உயிரிழப்புக்கு ரூ. 4 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். சேதமடைந்த படகுகள், வலைகளுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூ. 15 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும்.
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் மற்றும் இறவை பாசன பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 17 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்.
சேதமடைந்த பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்களுக்கு ரூ. 22 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 8 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்கப்படும்.