தமிழகத்தில் பாதுகாப்புக்காக முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்
1 min read
Advice to wear face mask for safety in Tamil Nadu
15.12.2023
சீனாவில் கடந்த சில மாதங்களாக சிறுவா்கள் புது வகையான காய்ச்சலால் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், சுவாசப் பிரச்சினைகளையும் பலா் எதிர் கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, புதிய பாதிப்புகள் மீது கண்காணிப்பை மத்திய அரசு தீவிரப்படுத்தியது. மாநிலங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
நோய் காரணங்களை சரியான நேரத்தில் உறுதிப்படுத்துவதற்கு ஆய்வக திறன்களை மேம்படுத்தும் வகையில், 150-க்கும் மேற்பட்ட வைரஸ் ஆராய்ச்சி மற்றும் நோய் கண்டறியும்’ ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு, தேசிய அளவிலான கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
மைக்கோபிளாஸ்மா நிமோனியா உட்பட பரிசோதிக்கப்பட வேண்டிய வைரஸ்களின் முன்னுரிமை குறித்து ஆய்வகங்களுக்குத் தகவல் பகிரப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா சமீப காலமாக அதிகரித்து உள்ளது. இதன் தாக்கம் கேரளாவில் காணப்படுகிறது. கேரளாவில் தற்போது 1000-க்கும் மேற்பட்டவர்கள் புதிய வகை கொரோனாவால் சிகிச்சையில் உள்ளனர்.
புதியவகை கொரானாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு இருமல், தொண்டை வலி இருக்கும். 4 நாட்களுக்கு பிறகு சரியாகிவிடும். எனவே புதியவகை கொரோனா குறித்து பயப்பட தேவையில்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் புதிய வகை கொரோனா பரவல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
தமிழகத்தில் 98 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. அண்டை மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படும். அதன் மாதிரிகளை ஆய்வு செய்து எந்த வகை வைரஸ் என கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்த மாதிரியான வைரஸ் உருமாற்றம் ஆகிறது என ஆய்வு செய்து ஒரு வாரத்தில் தெரிவிக்கப்படும். ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை எல்லோருக்கும் தேவையில்லை. பதட்டமான சூழலும் தமிழகத்தில் இல்லை என்றார்.
இதற்கிடையே தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ககன்தீப் சிங் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது பரவி வரும் இன்புளூயன்சா தொற்று குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். பருவமழைக் காலத்தில் பரவும் நோய்களைத் தடுக்க நாள்தோறும் 300 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
இன்புளூயன்சா தொற்று ஏற்பட்டவர்கள் மட்டுமன்றி அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது. காய்ச்சல் அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற வேண்டும்.
தமிழகத்தில் இருந்து நாள் தோறும் பல்லாயிரக்கணக்கானோர் சபரிமலைக்கு செல்கின்றனர்.
கேரளத்தில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்திருப்பதைக் கண்டு தமிழக மக்கள் அச்சமடையத் தேவையில்லை. இந்த விவகாரத்தில் தமிழக அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.