தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை; முப்படைகளின் உதவி கோரிய தமிழக அரசு
1 min read
Record rainfall in southern districts; The Tamil Nadu government sought the help of the three forces
18.12.2023
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்துள்ளது. இதையடுத்து விருதுநகர், மதுரை, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு கன மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அண்மையில் மிக்ஜாம் புயலானது சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைப் புரட்டிப்போட்ட நிலையில் தற்போது தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக எட்டு தென்மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு திங்கட்கிழமை (டிசம்பர் 18) விடுமுறை அளிக்கப்பட்டது. அனைத்து தென்மாவட்ட ஆட்சியர்களும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மீட்புப் பணிகளுக்காக முப்படைகளின் உதவி கோரப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததாகவும் கடந்த 1992ஆம் ஆண்டு பெய்ததைவிட தற்போது அதிகளவு மழை பெய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 7,500 பேர் மீட்கப்பட்டு 84 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
12 ஐஏஎஸ் அதிகாரிகள் களத்தில் உள்ளனர் என்றும், வெள்ள மீட்புப் பணிகளுக்காக கூடுதல் படகுகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதற்கிடையே நெல்லையில் வீடுகள் இடிந்து விழுந்த இரு வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு பேர் பலியாகி உள்ளனர்.
இதற்கிடையே, மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற இரண்டு விமானங்கள் மதுரையில் தரை இறக்கப்பட்டது. மேலும் சில விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 93 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இது வரலாறு காணாத மழைப்பொழிவு என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
திருச்செந்தூரில் 68 சென்டி மீட்டரும் ஸ்ரீவைகுண்டத்தில் 62 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளன. இதையடுத்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் வந்தே பாரத் உள்ளிட்ட பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் ரத்தானதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.