திருச்செந்தூரில் இருந்து சென்னை வந்த ரெயில் நடுவழியில் நின்றது
1 min read
The train from Thiruchendur to Chennai stopped midway
18.12.2023
திருச்செந்தூரில் இருந்து சென்னை வந்த ரெயில் நடுவழியில் நின்றது. பலத்த மழையால் தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கினதை பார்த்த டிரைவர் ரெயிலை உடனடியாக நிறுத்தினார்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் அடுத்து தாதன்குளம் அருகே வெள்ளம் ஏற்பட்டு நிலையில், மண் அரிப்பு ஏற்பட்டு தண்டவாளத்தின் கீழ் இருந்த தரைப்பகுதி முழுமையாக அடித்துச் செல்லப்பட்டு உள்ளது. இந்நிலையில், தண்டவாளம் எந்த பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் நேற்று இரவு ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த ரயிலில் இருந்த நூறுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர்.
மற்றவர்களை மீட்கும் பணி நடப்பதற்குள் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தை தொடர்பு கொள்ளும் சாலைகள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கிவிட்டதால், ஏராளமான பயணிகள் ரயிலுக்குள்ளேயே உணவின்றி தவித்துவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ரயில் நிலைத்திற்கு அருகில் உள்ள சிறிய கடைகளிலிருந்து பயணிகள் குடிநீர் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில் நிலையம், முற்றிலும் வெள்ளத்தில் சிக்கியிருப்பதால் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை இருப்பதாக பயணிகளும் கருதுகிறார்கள்.
இந்த நிலையில் நெல்லை , தூத்துக்குடி மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வங்கிகள், தனியார் நிறுவனங்கள் , பள்ளிகள், கல்லூரிகள் இயங்காது. பால், மருந்து போன்ற கடைகள் திறந்து பணி நடக்கும்.
மேலும் சதுர கிரி மலை கோவிலுக்கு சென்ற ஏறத்தாழ 150 பக்தர்கள் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டனர். குமரி மாவட்டத்தில் பலத்த மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நிரம்பின. எனவே அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டன. விருதுநகர் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய 23 பேரை காவல்துறையினரும், தீஅணைக்கும் படையினரும் மீட்டனர்.
கேரளாவில் உள்ள சபரி மலைக்கு சென்ற 50 பக்தர்கள் வௌ்ளத்தில் சிக்கிக்கொண்டனர். அவர்களை கயிறு கட்டி மீட்டனர்.