கேரளாவில் புதிதாக 300 பேருக்கு கொரோனா பாதிப்பு- 3 பேர் உயிரிழப்பு
1 min read
300 new cases of corona in Kerala, 3 deaths
21.12.2023
நாட்டிலேயே அதிக அளவிளாக கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் இந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது இரண்டு ஆயிரத்தை தாண்டிவிட்டது.
இந்நிலையில், மாநிலத்தில் இதுவரை 2,341 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 300 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் இறந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 8 மணி வரை நாடு முழுவதும் பதிவான 358 பாதிப்பில், 300 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இதனால், கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,341 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் பதிவான மூன்று இறப்புகளுடன், கடந்த கால கொரோனா தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 72,059 ஐ எட்டியுள்ளது.
நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்ட கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 211ஆக உள்ளது.
கொரோனா தொற்று குறித்து, மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறுகையில், “கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள போதிலும், தொற்றை கையாள மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதால் யாரும் அச்சப்பட வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.
இந்திய அளவில்..
இந்தியா அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 358 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கேரளாவில் கொரோனா தொற்றால் 3 பேர் உயிரிழந்த நிலையில், இறப்பு எண்ணிக்கை 5,33,327 ஆக பதிவாகியுள்ளது.
இதேபோல், கேரளா, கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களில் புதிய வகை கொரோனா தொற்று பதிவாகியுள்ளன. இதனை தொடர்ந்து நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,70,576 ஆக அதிகரித்துள்ளது மற்றும் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது என சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதை அடுத்து மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் முன்னேற்பாடுகள் குறித்து சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பது அவசியம் ஆகும். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மத்திய மற்றும் மாநில அளவில் முறையான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும் கொரோனா இன்னும் நிறைவுபெறாத நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள், அறிகுறிகள் மற்றும் அதன் தீவிரம் குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம் ஆகும். கொரோனா பாதிப்பு தொடர்பாக மாநில அரசுகள் விழிப்புடன் இருப்பது அவசியம் ஆகும் என்று மத்திய மந்திரி மாண்டவியா தெரிவித்தார்.