இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள் சஸ்பெண்ட்: மத்திய அரசு நடவடிக்கை
1 min read
New Executives of Wrestling Federation of India Suspended: Central Govt
24.12.2023
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது இளம் வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அவர் பதவி விலக கோரி மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து அவர் தலைவர் பொறுப்பில் இருந்து ஒதுங்கினார்.
இதற்கிடையே இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் பிரிஜ்பூஷனின் நெருங்கிய ஆதரவாளர் சஞ்சய் சிங் வெற்றி பெற்றார். பெரும்பாலான பதவிகளை அவரது ஆதரவாளர்களே கைப்பற்றினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீரர்-வீராங்கனைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றவரான மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா மத்திய அரசு தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திரும்ப பிரதமரிடமே அளிப்பதாக அறிவித்தார். அவர் பத்மஸ்ரீ விருதை பிரதமர் இல்லம் அருகே நடைபாதையில் வைத்து விட்டுச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வீரர்-வீராங்கனைகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் நேற்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டது. இந்திய மல்யுத்த சம்மேளனத்தை சஸ்பெண்டு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விளையாட்டு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் 15 வயது மற்றும் 20 வயதுக்குட்பட்டோர் போட்டியை வீரர்-வீராங்கனைகள் தயாராவதற்கு போதுமான அறிவிப்பை கொடுக்காமல் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த அவசர அறிவிப்பை வெளியிட்டதையடுத்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு, மறு உத்தரவு வரை இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
புதிய அமைப்பு, மல்யுத்த சம்மேளனத்தின் அரசியலமைப்பை பின்பற்றவில்லை. நாங்கள் கூட்டமைப்பை நிறுத்தவில்லை. அடுத்த உத்தரவு வரும் வரை சஸ்பெண்டு செய்துள்ளோம். அவர்கள் சரியான செயல்முறை, விதிகளைப் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.