நிவாரண பணிகளுக்கு போதிய நிதி வழங்க வேண்டும்- நிர்மலா சீதாராமனிடம் மு.க. ஸ்டாலின் மனு
1 min read
Adequate funds should be provided for relief work- Nirmala Sitharaman told M.K. Stalin’s petition
26.12.2023
தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பார்வையிட்டார். ” பெரு மழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டுக்கு, நிவாரண பணிகளுக்கு ஒன்றிய அரசின் நிதியை உடனே அனுமதிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்ட முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மனு மத்திய மந்திரியிடம் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் . தங்கம் தென்னரசு அவர்கள், தென் தமிழ்நாட்டில் அதி கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகள் குறித்த விவரங்கள் அடங்கிய முதல்வரின் கோரிக்கை மனுவினை அளித்து, நிவாரணம் மற்றம் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நிதி வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டது
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :-
இந்தியாவிலேயே இரண்டாவது நீளமான கடலோரப் பகுதிகளைக் கொண்டுள்ளதுடன், கடந்த நூறாண்டுகளில் 50 புயல்களை எதிர்கொண்டுள்ள தமிழ்நாடு தொடர்ந்து இத்தகைய இயற்கைச் சீற்ற ஆபத்துகளுக்கு உள்ளாகி வருகிறது. மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளோடு சேர்ந்து, அண்மையில் தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழையும் மாநிலத்தில் பெரும் சேதத்தை விளைவித்திருக்கிறது.
தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர். கனிமொழி கருணாநிதி மற்றும் மூத்த அதிகாரிகள் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம் தற்போதைய நிலையையும் மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளையும் பற்றி எடுத்துரைத்தனர். மேலும், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளைக் குறித்த விவரங்கள் அடங்கிய 72 பக்க விரிவான கோரிக்கை மனுவையும் அளித்து, இப்பேரிடரை எதிர்கொண்டு, நிவாரண மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான நிதி ஆதாரங்களின் தேவையை வலியுறுத்தினர்.
மாநிலப் பேரிடர் நிவாரண நிதியில் குறைந்த அளவான நிதியே இருக்கும் நிலையில், ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அதனை விடப் பன்மடங்கு மிகுதியாக உள்ளன. எனவே, இதுவரை இல்லாத அளவிலான இந்தச் சவாலான சூழ்நிலையைத் தமிழ்நாடு எதிர்கொள்ளப் போதிய நிதி உதவியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என அக்கறையோடு கோருகிறோம்.
இவ்வாறு முதல் அமைச்சர் கூறி இருக்கிறார்