June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

ஆதித்யா எல்1 விண்கலம் லக்ராஞ்சியன் புள்ளியை அடைந்தது

1 min read

Aditya L1 spacecraft reaches the Lagrangian point

6.1.2024
செவ்வாய், நிலவைத் தொடர்ந்து சூரியனின் புறவெளிப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை ஆராயும் முனைப்பில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதன்படி ஆதித்யா எல்-1 எனும் அதிநவீன விண்கலத்தை வடிவமைத்து பிஎஸ்எல்வி – சி-57 ராக்கெட் மூலம் கடந்தாண்டு செப்டம்பர் 2ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் எனும் எல்-1 புள்ளியில், பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசை சமமாக இருக்கும். அந்தப் புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆதித்யா விண்கலம், சூரிய புறவெளியின் வெப்பச் சூழல், கதிர்வீச்சு உள்ளிட்டவை குறித்து ஆராய உள்ளது.
ஏறத்தாழ 127 நாட்கள் பல கட்ட பயணத்தை மேற்கொண்டு ஆதித்யா விண்கலம் எல்-1 புள்ளி இலக்கில் சரியாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தபடி விஞ்ஞானிகள் இந்தப் பணிகளை மேற்கொண்டனர். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த விண்கலம் சூரியன் குறித்த ஆய்வை மேற்கொள்ளும். விண்வெளி துறையில் புதிய மைல் கல்லை இஸ்ரோ நிகழ்த்தியுள்ளது.

சூரியனின் நேர் எதிர் திசையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த விண்கலம் என்னென்ன ஆய்வுகள் செய்யும் என்பது பற்றி பார்க்கலாம்;
சூரியனை பூமி சுற்றிவரும்போது, அதற்கு ஏற்ப சூரியனை ஆதித்யா விண்கலமும் பின்தொடரும் வகையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சூரியனில் ஏற்படும் மாற்றங்கள், அதனால் நிகழும் விளைவுகளை முன்கூட்டியே பூமியில் இருந்து அறிய முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஏற்கனவே சூரியனின் படங்களை ஆதித்யா எல்-1, பூமிக்கு அனுப்பி உள்ளது. தொடர்ந்து அறிவியல் சோதனைகளுக்காக சூரியனின் பல்வேறு கோணங்களின் படங்களையும் ஆதித்யா விண்கலம் அனுப்ப உள்ளது. இதனால், விண்வெளியில் உலவும் செயற்கைக்கோள்களை பல்வேறு பாதிப்புகளில் இருந்து காப்பாற்ற முடியும் என விஞ்ஞானிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. சூரியனின் வெளிப்புற அடுக்குகளை ஆய்வு செய்ய 7 வகையான கருவிகள் விண்கலத்தில் உள்ளன. ஆதித்யா விண்கலம் பயணிக்கும் போதே ஹெல் 1 ஓஎஸ், ஏபெக்ஸ் சூட் ஆகிய சாதனங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. சூரியனில் ஏற்படும் நிகழ்வுகளால் அதன் புறவெளியில் ஏற்படும் மாற்றங்களை மீதமுள்ள கருவிகள் ஆராயும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.