ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விரைந்து விசாரிக்கப்படும்- சுப்ரீம் கோர்ட்டு உறுதி
1 min read
Sterlite plant case will be heard soon- Supreme Court
8.1.2024
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கின் விசாரணையை விரைந்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது எனக் கூறி தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசால் மூடப்பட்டது. இதை எதிர்த்து ஆலை நிர்வாகம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் பல ஆண்டுகளாக இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.
வழக்கினை உடனடியாக விசாரிக்க வேண்டும் என ஆலை நிர்வாகம் சார்பில் கடந்த ஆண்டு மே மாதம் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி அமர்வில் கோரிக்கை வைத்த போது ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த வழக்கின் விசாரணையை நிறைவு செய்து விடலாம் என தலைமை நீதிபதி உறுதி கூறியிருந்தார்.
ஆனால், அடுத்தடுத்து பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டதால் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாமல் போனது.
பின்னர் ஆலை நிர்வாகம் சார்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்விடம் மீண்டும் முறையிட்டபோது விசாரணைக்கான தேதியை குறிப்பிட்டு சொல்ல சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மறுப்பு தெரிவித்து இருந்தார்.
அதன் பிறகு 4 மாதங்கள் ஆகியும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாததன் காரணமாக காலை நிர்வாகம் சார்பில் இன்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் இன்று மீண்டும் முறையிடப்பட்டது. ஆலை மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் இவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆலை நிர்வாகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ்சிங் தெரிவித்தார்.
இந்த மாதமும் அடுத்த மாதமும் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வுகள் பல வழக்குகளை விசாரிக்க உள்ள நிலையில் இடைப்பட்ட காலத்தில் தங்களது மனுவை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். வழக்கை விசாரணைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க எடுக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உறுதி அளித்தார்.