July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

லட்சத்தீவு விவகாரம்; சீனாவிடம் சுற்றுலாப்பயணிகளை அனுப்ப மாலத்தீவு கோரிக்கை

1 min read

Lakshadweep Affair; Maldives requests China to send tourists

10.1.2024
லட்சத்தீவு விவகாரம் சர்ச்சையான நிலையில், மாலத்தீவு அதிபர் மிஜ்ஜு சீனாவுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர் புஜியான் மாகாணத்தில் நடந்த மாலத்தீவு வர்த்தக கூட்டமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, சீனாவை நெருங்கிய கூட்டாளி என குறிப்பிட்டார். மாலத்தீவின் வளர்ச்சிக்கான நட்பு நாடுகளில் ஒன்று எனவும் கூறினார்.
இதனை தொடர்ந்து அவருடைய அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியான பதிவில், கொரோனாவுக்கு முன் மாலத்தீவின் நம்பர் ஒன் சந்தையாக சீனா இருந்து வந்தது. சீனா, இந்த நிலையை மீண்டும் பெறுவதற்கான முயற்சிகளை நாம் தீவிரப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சீனா மற்றும் மாலத்தீவு என இரண்டு நாடுகளும், ஒருங்கிணைந்த சுற்றுலா மண்டல வளர்ச்சிக்காக ரூ.415.92 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு கையெழுத்திட்டு உள்ளன என மாலத்தீவில் இருந்து வெளிவரும் ஊடகம் தெரிவித்து உள்ளது. இதன்பின் புஜியானில் இருந்து பீஜிங் நகருக்கு மிஜ்ஜு நேற்று சென்றார்.
சமீபத்தில், பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தின்போது, பிரிஸ்டைன் பீச்சில் அவர் எடுத்த வீடியோவை பகிர்ந்ததற்கு எதிராக மாலத்தீவு மந்திரிகள் சிலர் அவதூறு ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை வெளியிட்டனர். இதன் தொடர்ச்சியாக இந்தியர்கள் பலர் மாலத்தீவுக்கான சுற்றுலா பயணங்களை ரத்து செய்தனர். இந்தியாவின் திரை பிரபலங்கள் சல்மான் கான், அக்சய் குமார் உள்ளிட்ட பலரும் மாலத்தீவு மந்திரிகளுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து இருந்தனர்.

தூதரக அளவிலும் இந்த விவகாரம் வெடித்தது. மாலத்தீவு தூதருக்கு இந்தியா சார்பில் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக, மிஜ்ஜு தலைமையிலான அரசு, 3 துணை மந்திரிகளை பதவி நீக்கம் செய்திருந்தது. மாலத்தீவின் சுற்றுலா தொழிலுக்கான கூட்டமைப்பும் கடுமையாக கண்டனம் தெரிவித்து இருந்தது. அந்நாட்டின் சுற்றுலா அமைச்சக தகவலின்படி, 2023-ம் ஆண்டில் இந்தியாவே பெரிய சுற்றுலா சந்தையாக தொடர்ந்து இருந்துள்ளது.

இதன்படி, அதிக அளவாக இந்தியாவில் இருந்து 209,198 சுற்றுலாவாசிகள் சென்றுள்ளனர். 2-வது இடத்தில் ரஷியா (209,146) மற்றும் 3-வது இடத்தில் சீனா (187,118) உள்ளது.

2022-ம் ஆண்டிலும் இந்தியாவே முதல் இடத்தில் இருந்தது. எனினும், கொரோனாவுக்கு முன் 2.8 லட்சம் சுற்றுலாவாசிகளுடன் சீனா முதல் இடத்தில் இருந்தது. அதன்பின் ஏற்பட்ட பொருளாதார சரிவால் சீனா அதில் இருந்து வெளிவருவதற்கு முடியாமல் போராடி வருகிறது. இதனால், சீன சுற்றுலாவாசிகள் வெளிநாட்டு சுற்றுலாவை குறைத்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.