உண்மையான சிவசேனா: சுப்ரீம் கோர்ட்டில் உத்தவ் தாக்கரே தரப்பு மேல்முறையீடு
1 min read
Real Shiv Sena: Uddhav Thackeray’s Appeal in Supreme Cour
15.1.2024
2022-ம் ஆண்டு முதல்-மந்திரியாக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இதனைத் தொடர்ந்து பாஜகவுடன் இணைந்து உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்தனர். பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி ஆனார்.
அப்போது ஏக்நாத் ஷிண்டே பக்கம் சென்ற 40 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உத்தவ் தாக்கரே தரப்பு, சபாநாயகர் ராகுல் நார்வேகரிடம் மனு கொடுத்தது. அதேபோல ஏக்நாத் ஷிண்டே தரப்பு, உத்தவ் தாக்கரேவின் 14 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் மனு தந்தது. இந்த மனுக்கள் மீது சபாநாயகர் முடிவு எதுவும் எடுக்காததால் சுப்ரீம் கோர்ட்டில் உத்தவ் தாக்கரே தரப்பு முறையிட்டது. சுப்ரீம் கோர்ட்டு இதில் கடுமை காட்டிய நிலையில் சபாநாயகர் ராகுல் நார்வேகர் அதிரடி தீர்ப்பு வழங்கினார்.
ராகுல் நார்வேகர் தமது தீர்ப்பில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலானதுதான் உண்மையான சிவசேனா. ஏக்நாத் ஷிண்டேவை சட்டசபை குழு தலைவர் பதவியில் இருந்து நீக்க உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரம் கிடையாது. உத்தவ் தாக்கரே தரப்பு கொடுத்த 40 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கும் செய்யும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. ஏக்நாத் ஷிண்டே தரப்பு கொடுத்ததன் அடிப்படையில் 14 எம்.எல்.ஏக்களைத் தகுதி நீக்கம் செய்ய தேவை இல்லை என அதிரடியாக தெரிவித்திருந்தார். ஏற்கனவே தேர்தல் ஆணையமும் ஏக்நாத் ஷிண்டே தரப்புதான் உண்மையான சிவசேனா என தெரிவித்திருந்த நிலையில் அதனை சபாநாயகர் ராகுல் நார்வேகரும் உறுதி செய்திருந்தார்.
இந்தநிலையில், ஏக்நாத்சிண்டே தரப்பினர்தான் உண்மையான சிவசேனா என மராட்டிய சபாநாயகர் அறிவித்தற்கு எதிராக உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. ஏக்நாத்சிண்டே உள்ளிட்ட அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற தங்களது கோரிக்கையையும் ஏற்க மறுத்தற்கு எதிராகவும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.