July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

183வது பிறந்த தினம்: பென்னிகுவிக் சிலைக்கு அரசியல் கட்சியினர், விவசாயிகள் மரியாதை

1 min read

183rd birthday: Politicians, farmers pay tribute to Pennywick statue

16.1.2024

தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக உள்ளது முல்லைப்பெரியாறு அணை. இந்த அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் பிறந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் தேனி மாவட்ட மக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் அன்றைய தினம் அரசு விழாவாக கடைபிடிக்கப்படுவதால் லோயர்கேம்பில் உள்ள அவரது மணிமண்டபத்திற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் கலெக்டர் ஷஜீவனா, எம்.எல்.ஏ.க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. தங்கதமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது:-

தேனி மாவட்டம் இயற்கை சூழல் மிகுந்ததாக உள்ளது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதி விவசாயம் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது. இத்தகைய இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். பசுமை மிகுந்த மாவட்டமாக என்றும் தேனி மாவட்டத்தை கொண்டு செல்வது நம் அனைவரின் கடமையாகும் என்றார்.

நிகழ்ச்சியில் கூடலூர் நகர்மன்ற தலைவர் பத்மாவதி, தி.மு.க. நகர செயலாளர் லோகன்துரை உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அ.தி.மு.க. சார்பில் ஜக்கையன், முருக்கோடை ராமர், கூடலூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் அருண்குமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் மாலை அணிவித்தனர்.
பாலார்பட்டியில் பொங்கல் வைத்து பெண்கள் ஊர்வலமாக வந்து பென்னிகுவிக் சிலைக்கு மரியாதை செலுத்தினர். இவ்விழாவில் கயிறு இழுத்தல், பானை உடைத்தல், கோலிகுண்டு, கிட்டி, மான்கொம்பு சுற்றுதல், சிலம்பாட்டம் போன்ற விளையாட்டு போட்டிகளும் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் தப்பாட்டம், தேவராட்டம், கரகாட்டம், கிழவன்கிழவி, மாடாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களின் சார்பில் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தென்னங்கீற்றுகளால் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. உரல், அம்மிக்கல் போன்றவைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. உழவர்களின் ஏர் கலப்பை வடிவத்தில் செல்பி பாய்ண்ட் அமைக்கப்பட்டிருந்தது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.