2ஜி விசாரணையை தி.மு.க.-காங். நீர்த்துபோக வைத்தது- அண்ணாமலை குற்றச்சாட்டு
1 min read
2G probe by DMK-Cong. Diluted – Annamalai allegation
16.1.2024
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தி.மு.க. மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து தி.மு.க. பைல்ஸ் என்ற பெயரில் 2 முறை பட்டியல்கள் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் வெளியிட்ட பட்டியலில் தி.மு.க. பிரமுகர்கள் 12 பேரின் சொத்து பட்டியல் விவரம் இடம் பெற்றிருந்தது.
இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பில் இருந்து அண்ணாமலைக்கு நோட்டீசுகள் அனுப்பப்பட்டன.
ஆனால் அண்ணாமலை தான் தெரிவித்த குற்றச்சாட்டை மறுக்க முடியாது என்றும் வழக்கை எதிர் கொள்ள தயார் என்றும் கூறி பதில் நோட்டீஸ் அனுப்பினார்.
தி.மு.க. எம்.பி.யும், கட்சியின் பொருளாளருமான டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை 18-வது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அண்ணாமலையிடம் நஷ்ட ஈடு கேட்டும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோரியும் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் தி.மு.க. பைல்ஸ் இன்னும் தொடரும் என்றும் கூறி இருந்தார்.
இந்த நிலையில் பொங்கல் தினமான நேற்று தி.மு.க. பைல்ஸ்-3 என்ற புதிய ஆடியோ உரையாடலை வெளியிட்டுள்ளார்.
இதில் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலுவும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியும் முன்னாள் உளவுத் துறை ஐ.ஜி.யுமான ஜாபர்சேட் ஆகியோரிடையே நடக்கும் உரையாடல் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்த உரையாடலையும் வலைத் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் ஊழல் தன்மையை அம்பலப்படுத்தும் பலவற்றில் இதுவும் ஒன்று. இந்த கூட்டணி 2004 முதல் 2014 வரை வேறு பெயரில் இருந்தது.
டி.ஆர்.பாலு, ஜாபர்சேட் உரையாடலில் 2 ஜி விசாரணையில் சி.பி.ஐ. ரெய்டுகளின் நேரத்தை தி.மு.க. காங்கிரஸ் முடிவு செய்து விசாரணையை நீர்த்து போக செய்யும் வகையில் செயல்பட்டுள்ளன.
வரும் நாட்களில் இது தொடர்பாக மேலும் பல்வேறு தகவல்கள் வெளி வரும். நாளை ரெய்டுக்கு வர வேண்டாம். நாம் தயாராக இருக்கும் போது தகவல் சொல்லிவிடலாம் என்றெல்லாம் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் மூலம் எப்படியெல்லாம் வழக்கை நீர்த்து போக செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.