கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சபரிமலைக்கு பக்தர்கள் வருகை குறைவு
1 min read
The number of devotees during Mandal-Magaravilakku Puja season this year is less than last year
17.1.2024
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசனில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டும் மண்டல பூஜை காலத்தில் பல லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்தார்கள்.
ஆன்லைனில் முன்பதிவு செய்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த நிலையில், உடனடி முன்பதிவு வசதியை பயன்படுத்தியும் ஏராளமானோர் வந்ததால் மண்டல பூஜை காலத்தில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது. இதன் காரணமாக பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்பட நேர்ந்தது.
மகரவிளக்கு பூஜை தொடக்கத்திலும் சில நாட்கள் கடும் கூட்ட நெரிசலில் பக்தர்கள் சிக்கி அவதிப்பட்டனர். உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்ட பிறகே கூட்ட நெரிசல் கட்டுக்குள் வந்தது. தற்போது மகரவிளக்கு பூஜை முடிவுக்கு வந்த நிலையில், தை மாத பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டிருக்கிறது. வருகிற 20-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.
பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்ததாக கூறப்பட்டாலும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு பக்தர்கள் வருகை குறைவு என்றே கூறப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பக்தர்கள் எண்ணிக்கை 16 லட்சம் குறைந்துள்ளது.
அதேபோன்று வருவாயும் கடந்த ஆண்டை விட குறைவாகவே கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.403 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு மண்டல சீசனில் ரூ.241 கோடியே வருவாய் கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசனில் வருவாய் ரூ.300 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.