June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

7-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் சேர்க்கப்படும் போக்சோ சட்டம்

1 min read

POCSO Act to be included in Class 7 Social Studies

18/1/2024
7-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் போக்சோ சட்டம் அடுத்த கல்வியாண்டில் சேர்க்கப்படும்

தகவல் தொழில் நுட்பத்தில் நாளுக்குநாள் வளர்ச்சி கண்டுவரும் காலக்கட்டத்தில் வாழ்ந்து வரும் நாம், பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை கிடைக்கப் பெறுகிறோம். இதன் காரணமாக எந்த ஒரு விஷயத்தையும் நாம் எளிதாக செய்து முடிக்க முடிகிறது.
இதுபோன்ற வளர்ச்சிகளை கண்டு வியக்கும் நாம், சில விஷயங்களை கண்டு அதிர்ச்சியடைய வேண்டி இருக்கிறது. அதில் ஒன்று தான் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள். சின்னஞ்சிறிய குழந்தைகள் கூட பாலியல் தொல்லைக்கு ஆளாவது என்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது.

அதுகுறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்த போதிலும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடரத்தான் செய்கின்றன. ஆகவே அதனை கட்டுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட சட்டம் தான் போக்சோ சட்டம்.
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான பாலியல் குற்றங்களுக்கு எதிரான குழந்தைகளின் பாதுகாப்பு மசோதா (POCSO)-2011 நம் நாட்டு நாடாளுமன்றத்தில் 2012-ம் ஆண்டு மே 22-ந்தேதி நிறைவேற்றப்பட்டது.

2019-ம் ஆண்டில், போக்சோ சட்டம் திருத்தப்பட்டு மேலும் கடுமையாக்கப்பட்டது. இந்த திருத்தம் குறைந்தபட்ச தண்டனையை 7 முதல் 10 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் வரை உயர்த்தியது. பாதிக்கப்பட்டவர் 16 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், குற்றத்தில் ஈடுபட்டவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும். தீவிர தாக்குதலுக்கு மரண தண்டனை கூட விதிக்கப்படலாம்.
போக்சோ சட்டம் உருவாக்கப்பட்டதில் இருந்து அனைத்து மாநிலங்களிலும் அது தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனையும் கிடைத்துள்ளது. ஆனால் போக்சோ வழக்குகள் அதிகரித்ததே தவிர, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் குறைந்ததாக தெரியவில்லை.

அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில் போக்சோ வழக்குகள் அதிகம் பதியப்படும் மாநிலத்தில் ஒன்றாக கேரளா இருக்கிறது. குட் டச், பேடு டச் என அனைத்து தொடுகைகளின் விவரத்தையும் சிறு குழந்தைகள் இன்று எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது. இதனால் பெரும்பாலான குழந்தைகளுக்கு தங்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பற்றி அறிந்து கொண்டுள்ளனர் என்றால் அதை மறுக்கமுடியாது. இருந்தபோதிலும் போக்சோ சட்டம் பற்றி பள்ளி குழந்தைகள் எளிதில் தெரிந்துகொள்வதற்காக கேரள மாநில பள்ளி பாடத்திட்டத்தில் போக்சோ சட்டம் சேர்க்கப்படுகிறது.
வருகிற கல்வியாண்டில் 7-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் போக்சோ சட்டம் பற்றிய பாடம் இடம்பெற உள்ளது. இந்த தகவலை கேரள மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி தெரிவித்துள்ளார். அது பற்றி அவர் கூறியதாவது:-

போக்சோ சட்டம் பற்றிய பாடம் அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும். சமீப காலமாக குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 7-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் போக்சோ சட்டம் கற்பிக்கப்படும். இது அடுத்த ஆண்டு முதல் 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திலும் சேர்க்கப்படும்.

மேலும் 5 முதல் 10-ம் வகுப்பு வரை தொழிற்கல்வி சேர்க்கும் வகையில் பாடத்திட்டம் முழுமையாக திருத்தப்படும். 1,3,5,7,9 ஆகிய வகுப்பு பாடப் புத்தகங்களும் அடுத்த கல்வியாண்டில் மாற்றப் படும். 4,6,8,10 வகுப்புகளிலும் பாடத்திடம் அடுத்த ஆண்டு மாற்றப்படுகிறது.

1-ம் வகுப்பில் உள்ள அனைத்து புத்தகங்களிலும் செயல்பாட்டு புத்தகங்கள் உள்ளன. ஆசிரியர்களுக்கான புத்தகங்களும் தயாராகி வருகின்றன. மேலும் நாட்டிலேயே முதன்முறையாக பெற்றோருக்கான புத்தகங்களும் தயாராகிறது.

புதிய பாடத்திட்டத்தில் விளையாட்டு, கழிவு பிரச்சினை, தூய்மை, குடிமை உணர்வு, சமநீதியுடன் கூடிய பாலின விழிப்புணர்வு, அறிவியல் உணர்வு, விவசாயம், மதச்சார்பின்மை உள்ளிட்ட விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. பாட சாலைகள் திறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக புதிய பாட புத்தகங்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கேரள மாநிலத்தில் இதற்கு முன்பு விரிவான பாடத்திட்ட திருத்தம் 2007-ம் ஆண்டு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.