June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தஞ்சாவூர் அருகே சாலை விபத்தில் 4 பேர் பலி

1 min read

4 killed in Thanjavur road accident

20.1.2024
தூத்துக்குடியிலிருந்து வேளாங்கண்ணிக்கு, இன்று (சனிக்கிழமை) அதிகாலை கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒரு காரில் 11 பேர் சென்றுள்ளனர். இந்த கார் தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் காவல் சரகம் மனோரா அருகே செல்லும் போது சாலை ஓரங்களில் வளர்ந்திருந்த சீமைக்கருவேல மரங்கள் சாலையை மறைத்து நின்றதால் வேகமாகச் சென்ற கார் சிறிய பாலத்தில் மோதியுள்ளது. அதி வேகமாக வந்த கார் மோதி விபத்திற்குள்ளானதில் அந்த காரில் பயணித்த பாக்கியராஜ் (62), ஞானம்பாள் (60), ராணி (40), சின்னப்பாண்டி (40) ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் இந்த கார் விபத்தில் மரிய செல்வராஜ் (37), பாத்திமா மேரி (31), சந்தோஷ்செல்வம் (7), சரஸ்வதி (50), கணபதி (52), லதா (40), சண்முகத்தாய் (53) ஆகிய 7 பேரும் படுகாயமடைந்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் இவர்களை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மேலும், சீமைக்கருவேல மரங்கள் சாலையில் மறைத்து நின்றதால் இந்த விபத்து நடந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் இப்படி வளரும் புதர்களை அகற்றாமல் விட்டதால் தான் பாலம் இருப்பது தெரியாமல் மோதி விபத்துக்குள்ளாகி 4 உயிர்கள் பலியாகிவிட்டது. தேசிய நெடுஞ்சாலைகளை சரியாக பராமரிக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற விபத்துகளை தவிர்க்கலாம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டம், மூணாவயல் கிராமத்திலிருந்து நான்கு சக்கர வாகனத்தில் வேளாங்கண்ணிக்கு குடும்ப நிகழ்ச்சிக்காக செல்லும் வழியில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், சேதுபாவாசத்திரம், மனோரா அருகில் இன்று அதிகாலையில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த விபத்தில் பாக்கியராஜ் (62), ஞானம்மாள் (60), ராணி (40), சின்னபாண்டி (40) ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த செய்தியை கேட்டு வேதனை அடைந்தேன்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிசிச்சை அளிக்க அறிவுறுத்தி உள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா இருபத்தைந்தாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.