அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
1 min read
Enforcement Directorate raids Minister Senthil Balaji’s house
8.2.2024
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் 15-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி நேற்று உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 19-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலையில் இருந்தே சோதனை நடத்தினர். கேரள பதிவெண் கொண்ட வாகனத்தில் வந்த 5 அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அமைச்சர் செந்தில்பாலாஜி இல்லத்தில் அவரது பெற்றோர் வசித்தனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கு தொடர்பாக சோதனை நடத்தி வருவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வரும்போது துணை ராணுவப் படையினரை பாதுகாப்பிற்காக அழைத்து வருவது வழக்கம். அல்லது உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிப்பது வழக்கம். ஆனால், பாதுகாப்பிற்காக துணை ராணுவப்படை வீரர்கள் இல்லாமல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.