பஞ்சு மிட்டாய்க்கு தடை: கண்காணிக்க அரசு உத்தரவு
1 min read
Ban on cotton candy: Govt order to monitor
17.2.2024
பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.
பஞ்சு மிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகளை அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில் ‘ரோடமைன்-பி’ எனப்படும் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 பிரிவு 3(1) (zx) பிரிவு 3(1) (zz) (iii) (v) (viii) & (xi) மற்றும் பிரிவு 26(1) (2) (i)(ii) &(v) ன்படி தரம் குறைவான மற்றும் பாதுகாப்பற்ற உணவு என உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம்-2006 ன்படி ‘ரோடமைன்-பி’ எனப்படும் செயற்கை நிறமூட்டியை கொண்டு உணவுப் பொருட்களை தயாரித்தல், பொட்டலமிடுதல், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறுதல் ஆகியவை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம்-2006 ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
மேலும், இதுகுறித்து ஆய்வு செய்து உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன்படி கடுமையான நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை ஆணையரால் அனைத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக தொடர் சோதனையில் ஈடுபட அறிவுறுத்தி உள்ளது.
திரையரங்குகள், பூங்காக்கள், பள்ளிகள், கடற்கரைகள், கோவில் விழாக்களை அதிகாரிகள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டத்திற்கு புறம்பாக விற்பனையாகும் தடை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாயை யாரும் வாங்கி உண்ண வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.