மணல் கொள்ளையர்களால் கொல்லப்பட்ட வி.ஏ.ஓ மகன் நீதிபதி தேர்வில் வெற்றி
1 min read
VAO’s son killed by sand robbers wins judge election
18.2.2024
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்தாண்டு மணல் கொள்ளையர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸின் மகன் மார்ஷல் ஏசுவடியான், சிவில் நீதிமன்ற நீதிபதி தேர்வில் வென்று சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார்.
“உன்னை நீதிபதியாக பார்க்க வேண்டும் என என் தந்தை சொல்லிக்கொண்டே இருப்பார். அவரது ஆசையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வெற்றிக்கு எனது குடும்பம் மிகவும் உறுதுணையாக இருந்தது” என ஏசுவடியான் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ். இவருக்கு வயது 55. இவர் மணல் கொள்ளையை தடுப்பதில் தீவிரமாக செயல்பட்டு வந்ததால் கோபமடைந்த ஒரு கும்பல் அவரது அலுவலகத்திலேயே கடந்த ஏப்ரல் 25-ம் தேதி வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது.
லூர்து பிரான்சிசை வெட்டி கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் கலியாவூரை சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்ற ராமசுப்பு (41) மற்றும் மாரிமுத்து (31) ஆகிய இருவருக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. அதோடு இருவருக்கும் தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில், மறைந்த வி.ஏ.ஓ லூர்து மகன் மார்ஷல் ஏசுவடியான் தனது தந்தையின் கனவை நிறைவேற்றும் விதமாக சிவில் நீதிமன்ற நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.