டெல்லி சென்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு
1 min read
Tear gas fired at farmers who went to Delhi
21.2.2024
வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் பெற வேண்டும் என்று பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணைய பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்துள்ளனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் டெல்லி நோக்கி ஊர்வலம் செல்லும் போராட்டத்தை கடந்த
13-ந்தேதி தொடங்கினார்கள். அவர்களை சமரசம் செய்ய கடந்த 8, 12, 15 மற்றும் 18-ந்தேதிகளில் 4 தடவை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
கடந்த 18-ந்தேதி நடந்த 4-வது கட்ட பேச்சுவார்த்தையின்போது 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் சோளம், பருத்தி உள்ளிட்ட விளைப் பொருட்களை கொள்முதல் செய்யும் புதிய திட்டத்தை மத்திய அரசு முன்வைத்தது.
மத்திய அரசின் புதிய திட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர். இதன் காரணமாக விவசாயிகள் பிரச்சினையில் இதுவரை எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் இன்று (புதன்கிழமை) 9-வது நாளாக அவர்கள் போராட்டம் நீடித்தது.
இன்று மீண்டும் டெல்லியை நோக்கி ஊர்வலத்தை தொடங்கப்போவதாக விவசாயிகள் அறிவித்தனர். இதற்காக நேற்று இரவு முதலே விவசாயிகள் டெல்லி அருகே உள்ள பஞ்சாப், அரியானா எல்லைகளில் குவிய தொடங்கினார்கள்.
1200 டிராக்டர்களுடன் விவசாயிகள் பஞ்சாப் மாநில எல்லையான சம்பு நகரில் குவிந்துள்ளனர். மேலும் 300 கார்கள் மற்றும் 10 மினி பஸ்களில் விவசாயிகள் அந்த எல்லை பகுதிக்கு வந்துள்ளனர். இதனால் இன்று காலை சம்பு பகுதியில் கடும் பதட்டம் ஏற்பட்டது.
பஞ்சாப் எல்லையில் மட்டும் சுமார் 14 ஆயிரம் விவசாயிகள் திரண்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இன்று பகல் 11 மணிக்கு அவர்கள் டெல்லி நோக்கிய பயணத்தை தொடங்கினார்கள். தங்களது பயணம் அமைதியான முறையில் நடைபெறும் என்று விவசாய சங்க பிரதிநிதிகள் இன்று காலை தெரிவித்தனர்.
ஆனால் விவசாயிகள் தடை ஏற்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்துமீறி நுழையக்கூடும் என்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் சட்டம்-ஒழுங்கை சீர் குலைக்கும் வகையில் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் பணிகளை செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை உத்தரவிட்டு உள்ளது.
டெல்லி புறநகர் பகுதிகளான நொய்டா, திக்ரி, சிங்கு, காசியாபூர் பகுதிகளிலும் விவசாயிகள் திரண்டு உள்ளனர். அவர்கள் டெல்லிக்குள் ஊடுருவி போராட்டம் நடத்தக்கூடாது என்பதற்காக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேச மாநில எல்லைகளில் இரும்பு ஆணி மற்றும் சிமெண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லி புறநகர் பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் இருந்து பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேச சாலைகளில் போக்கு வரத்து நெரிசல் காணப்படுகிறது.
என்றாலும் விவசாயிகள் தடுப்புகளை உடைத்து விடக்கூடாது என்பதற்காக எல்லை பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். விவசாயிகளை விரட்டுவதற்கான வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. டெல்லிக்குள் வரும் சாலைகள் மூடி சீல் வைக்கப்பட்டு உள்ளன.
இந்த தடுப்புகளை அகற்றும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை மத்திய-மாநில போலீசார் ஏற்க வில்லை. இதையடுத்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர். சட்டம்-ஒழுங்கு சீர் குலைந்தால் அதற்கு தாங்கள் பொறுப்பு அல்ல என்று கூறி உள்ளனர்.
இதன் காரணமாக மீண்டும் டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் பதட்டமான சூழ்நிலை உருவாகி இருக்கிறது. விவசாயிகள் போராட்டத்தை எதிர்கொள்ள டெல்லி புறநகர் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக டெல்லி நகருக்குள்ளும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்து நின்று ஊர்ந்தபடி சென்றன.
இத்தகைய சிக்கல்களில் இருந்து மீள்வதற்கு மத்திய அரசு மீண்டும் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். ஆனால் மத்திய அரசு தங்களது புதிய திட்டத்தை விவசாயிகள் ஏற்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதன் காரணமாக மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே இழுபறி நீடிக்கிறது. விவசாயிகளை பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து தூண்டி விடுவதாகவும் பா.ஜனதா தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இந்நிலையில் டெல்லி எல்லை அருகே திரண்டுள்ள விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது.
இச்சம்பவம் தொடர்ந்து அரியானா மற்றும் பஞ்சாப் எல்லையான சம்பு பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.
5வது கட்டமாக விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
டெல்லி வந்த கிரீஸ் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு: பிரதமர் மோடியுடன் சந்திப்பு
தலைநகர் டெல்லியில் நடைபெறும் 9-வது ரெய்சினா பேச்சுவார்த்தையில் கிரீஸ் பிரதமர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.
கிரீஸ் பிரதமர் கிரியகோஸ் மிசோடாகிஸ் இரு நாட்கள் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு பாரம்பரிய முறையிலான சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
டெல்லி வந்தடைந்த கிரீஸ் பிரதமர் தனது மனைவியுடன் ராஜ்காட் சென்றார். அங்கு மகாத்மா காந்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில், கிரீஸ் பிரதமர் கிரியகோஸ் மிசோடாகிஸ் பிரதமர் மோடியை இன்று சந்தித்தார். இரு நாட்டு தலைவர்களும் இருதரப்பு விவாதங்களில் பங்கேற்றனர்.
பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் கிரீஸ் பிரதமரின் பயணம் அமைகிறது என மத்திய வெளிவிவகார அமைச்சகம் அறிவித்தது.
15 ஆண்டுகளுக்கு பிறகான கிரீஸ் பிரதமரின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
=
தொடர் பலி கேட்கும் ஆற்றுப் பாலம்
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அவிட்டத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஷீபா ஜாய். இவர் கருவண்ணூர் பகுதிக்கு வந்திருக்கிறார். பின்பு அங்குள்ள ஆற்றுப்பாலத்தில் தனது கைப்பை மற்றும் செல்போனை வைத்துவிட்டு, பாலத்தின் மேலே இருந்து ஆற்றுக்குள் குதித்தார். ஆற்றுக்குள் ஷீபா ஜாய் குதிப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீண்டநேர தேடுதலுக்கு பிறகு ஷீபா ஜாய் பிணமாக மீட்கப்பட்டார். இதே இடத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு பெண் ஆற்றுக்குள் குதித்து தற்கொலை செய்தார். மேலும் அந்த இடத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
அது மட்டுமின்றி இந்த இடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாலிபரும், மாணவியும் ஆற்றில் குறித்து தற்கொலை செய்துகொண்டார்கள். ஆகவே இந்த இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.