“தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்”- முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
1 min read
“People of Tamil Nadu will not be fooled” – Chief Minister Stalin says
4.3.2024
மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலகத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து, அவர் 12,653 பயனாளிகளுக்கு ரூ.655.44 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பழமையான திருக்கோயில்கள் நிறைந்த மாவட்டம் மயிலாடுதுறை. மண் மணமும், நெல் மணமும் கலந்து வீசுவது டெல்டா மாவட்டங்களின் சிறப்பு. புதிய மாவட்டங்கள் அறிவிப்பது பெரிதல்ல, உள்கட்டமைப்பை ஏற்படுத்தி தர வேண்டும்.
மயிலாடுதுறையில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. திருவாரூரில் ரூ.2.5 கோடியில் உலர்மின் நிலையம் அமைக்கப்படும். மயிலாடுதுறையில் ரூ.5 கோடி மதிப்பில் புதிய நூலகம் அமைக்கப்படும். அரசுத் திட்டங்களின் பயன்கள் உரிய மக்களை சேர்ந்துள்ளதா என்பதை அறிந்து கொள்ள மார்ச் 6ம் தேதி நீங்கள் நலமா? என்ற திட்டம் துவங்கப்பட உள்ளது. பொதுமக்களை தொலை பேசியில் தொடர்பு கொண்டு கருத்துக் கேட்டு அதன் அடிப்படையில் அரசுத் திட்டங்கள் செம்மைப்படுத்தப்படும்.
விரைவில் லோக்சபா தேர்தல் நடக்க இருப்பதால், அடிக்கடி பிரதமர் மோடி தமிழகம் வரத் துவங்கி இருக்கிறார். ஓட்டு மட்டும் போதும் என்று நினைத்து தமிழகத்துக்கு வருகிறார் மோடி. அண்மையில் ஏற்பட்ட 2 இயற்கை பேரிடர்களுக்கு ஒரு பைசா கூட நிதி தரவில்லை. தமிழக மக்கள் ஒருபோதும் பிரதமர் மோடியை பார்த்து ஏமாற மாட்டார்கள். தமிழகத்தின் உரிமைக்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபடும் திராவிட மாடல் அரசின் பக்கமே மக்கள் நிற்பார்கள். இவ்வாறு முதல்வர் மு.க..ஸ்டாலின் பேசினார்.