இது குடும்ப ஆட்சிதான்-முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
1 min read
This is Family Rule – Statement by Chief Minister M. K. Stalin
6.3.2024
”எங்களை சிலர் குடும்ப ஆட்சி என்று சொல்கிறார்கள். ஆம் இது குடும்ப ஆட்சிதான்! ஒவ்வொரு குடும்பத்தையும் கை தூக்கிவிடும் ஆட்சி இது” என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘நீங்கள் நலமா?’ என்ற திட்டத்தை இன்று (மார்ச் 6) துவக்கி வைத்தார். இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, ஒவ்வொரு நாளும் எத்தனையோ முத்திரை திட்டங்களை துவங்கியுள்ளோம். அப்படியொரு திட்டம்தான் ‘நீங்கள் நலமா?’ என்ற புதிய திட்டம். இந்த தலைப்பே, மக்களின் மீதான எங்களது கனிவான சிந்தனையை, அன்பான அக்கறையை காட்டும்.
மகளிர் விடியல் திட்டம், புதுமைப் பெண், காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், ஒலிம்பிக் தேடல், நான் முதல்வன் போன் பல திட்டங்கள் கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்து வருகின்றன. இதனை தொகுத்து பார்த்தால் ஒவ்வொரு குடும்பத்தையும், ஒவ்வொரு தனிமனிதரையும் மேம்படுத்தும் திட்டங்கள்.
எங்களை சிலர் குடும்ப ஆட்சி என்று சொல்கிறார்கள். ஆம் இது குடும்ப ஆட்சிதான்! ஒவ்வொரு குடும்பத்தையும் கை தூக்கிவிடும் ஆட்சி இது! கோட்டையில் உட்கார்ந்து திட்டங்கள் தீட்டி அறிவிப்பதோடு எனது கடமை முடிந்து விட்டதாக நான் எப்போதும் நினைப்பது இல்லை. ஒதுக்கப்படும் நிதி ஒவ்வொரு குடிமகனையும் சென்று சேர வேண்டும்; நலத்திட்டம் ஒரு ரூபாய் என்றாலும் அது உங்களிடம் வந்து சேர வேண்டும் என்று நினைத்து திட்டங்களை தீட்டுபவன் நான்.
சில நாட்களுக்கு முன்னால் சென்னைக்கு வந்து பேசிய பிரதமர் மோடி, மாநில அரசுக்குத் தராமல் மக்களுக்கு நேரடியாக நிதி வழங்கி வருவதாக அப்பட்டமான ஒரு பொய்யை சொல்லிவிட்டு சென்றுள்ளார். எந்த மக்களுக்கு கொடுத்தார் என்பதை சொல்லி இருந்தால் அந்த மக்களுக்கு கிடைத்ததா என்று கேட்கலாம்.
இரண்டு மாபெரும் இயற்கை பேரிடரை 8 மாவட்டத்து மக்கள் சந்தித்தார்கள். இதற்காக ரூ.37 ஆயிரம் கோடி நிதி கேட்டோம். அதற்கு ஒரு ரூபாயாவது ஒதுக்கி, தமிழக மக்களுக்கு உதவி செய்தாரா பிரதமர்? இப்படியா பொய்களை சொல்வது?
மத்திய அரசிடம் இருந்து நிதி வரவில்லை என்றாலும் 8 மாவட்ட மக்களுக்கு மாநில பேரிடர் நிதி மற்றும் அரசுத் துறைகளில் இருந்து நிதி வழங்கியும், நிவாரணப் பணிகளையும் செய்தது இந்த ஸ்டாலின் அரசு. உங்கள் ஒவ்வொருவருக்காகவும் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கும் என்று உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.