இரட்டை இலை சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை
1 min read
Permanent ban on use of O. Panneerselvam double leaf symbol
18.3.2024
கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேரை கட்சியில் இருந்து நீக்கியும், பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், அவர் உட்பட 4 பேரை நீக்கி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்த தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உத்தரவில், பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை எதுவும் விதிக்கவில்லை.
எனவே, அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினர் பயன்படுத்த கூடாது என்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஓபிஎஸ் தரப்பில் ஒரு முறையீடு செய்யப்பட்டது. தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் தீர்ப்பில், அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவைகளை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர், தடை விதித்தது செல்லும் என தீர்ப்பளித்தனர். மேலும் ஓபிஎஸ் தரப்பு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அதேநேரம் வேண்டுமானால் ஓபிஎஸ் தரப்பு, தனி நீதிபதி முன் உரிய மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நிரந்தரம் செய்தும் உத்தரவிட்டது.
பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவேன் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து இருந்த நிலையில் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.