இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மேலும் ஒரு மனு தாக்கல்
1 min read
Another petition filed in Election Commission against double leaf symbol
19.3.2024
அ.தி. மு.க.வின் பெயர், சின்னம், கொடி, லெட்டர்பேடு ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம், இந்திய தேர்தல் கமிஷனில் ஒரு மனு அளித்துள்ளார். அந்த மனுவில், ‘எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினர் பொதுக்குழுவை கூட்டி பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர். கோர்ட்டில் இது தொடர்பாக உள்ள சிவில் வழக்குகளில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிதான் உண்மையான அ.தி.மு.க. என்று இறுதி உத்தரவோ, தீர்ப்போ வழங்கப்படவில்லை.
எனவே, நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் கட்சியின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான ஏ மற்றும் பி படிவங்களில் நான் கையொப்பம் இடுவதற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும். அல்லது மாற்று ஏற்பாடாக இரு பிரிவினருக்கும் சுயேச்சை சின்னங்களை ஒதுக்கலாம். இதில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு பொதுவான சின்னம் வழங்க வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கும் அதிகாரத்தை ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.க்கு தரக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. ராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் பழனிச்சாமி உள்ளிட்டோர் அளித்துள்ள மனுவில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வழங்கியது போல தற்போதும் படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரத்தை அவைத்தலைவர் தமிழ்மகன் உசைனுக்கு வழங்க வேண்டும். அ.தி.மு.க. (ஓபிஎஸ்) என்ற பெயரை அளிக்க வேண்டும் என ஓபிஎஸ் அளித்த மனுவை நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.