சீமான் வழக்கு: நடிகை விஜயலட்சுமிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
1 min read
Seeman case: Chennai High Court orders actress Vijayalakshmi
19.3.2024
திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சீமான் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு கடந்த ஆண்டு ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, விஜயலட்சுமியை நேரில் ஆஜராக உத்தரவிட்டார். ஆனால், சீமான் மனு அதன் பின்னர் விசாரணைக்கு வரவில்லை. இந்தநிலையில், இந்த மனு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் வக்கீல் எஸ்.சங்கர் ஆஜராகி, “விஜயலட்சுமி போலீசில் கொடுத்த முதல் புகாரை திரும்ப பெற்றுவிட்டார்” என்றார். உடனே நீதிபதி, “இந்த மனு மீதான விசாரணையில், புகார்தாரர் விஜயலட்சுமியிடம் விசாரிக்க வேண்டியதுள்ளது. அதனால், 19-ந்தேதி (இன்று) நேரில் ஆஜராக வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
அதன்படி, சீமான் தாக்கல் செய்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பெங்களூருவில் வசித்து வரும் நடிகை விஜயலட்சுமிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகும் படி நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் அதற்கு அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜராக விரும்பாவிட்டால் மனுவை ஏன் நிலுவையில் வைத்திருக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதி, விஜயலட்சுமி ஆஜராக அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை ஏப்ரல் 2-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய தினம் நேரிலோ அல்லது காணொலி காட்சி மூலமாகவோ ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.