ஊழலை அகற்றும் தேர்தல் இது- பிரதமர் மோடி பேச்சு
1 min read
This is the election to eliminate corruption – PM Modi speech
10.4.2024
மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ராணுவ ஹெலிகாப்டர் மூலம், பிரதமர் மோடி கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வந்தடைந்தார். பிரதமர் மோடியை பா.ஜ.க. மூத்த நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். நீலகிரி, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் மனித ஆற்றலும் திறமையும் கொட்டி கிடக்கிறது. அதை தி.மு.க. அரசு வீணடித்து வருகிறது. ஜவுளி தொழிலில் சிறந்து விளங்கும் கோவையில் மின் கட்டண உயர்வால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டம் மூலம் இலக்கை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தை முடக்க நினைக்கும் தி.மு.க. தமிழகத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. காங்கிரஸ், தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் இருந்தன.
எந்த கட்சி ஆட்சியாக இருந்தாலும் ஒவ்வொரு மாநிலமும் வளர வேண்டும் என்பதே பா.ஜ.க. அரசின் நோக்கம். கோவை உள்ளிட்ட இரண்டு நகரங்களில் மாதிரி தளவாட பட்டறை, பூங்கா திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மூன்றாவது முறை ஆட்சியின் போது, கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்காக வேகமாக செயல்படுவோம். எங்கள் அரசு இந்தியர்கள் மீது நம்பிக்கை வைத்தது. கொரோனாவுக்கு தடுப்பூசி தயாரித்தது. எதை முடியாது என்று சொன்னார்களோ, அதை நாங்கள் செய்து காட்டினோம். கொரோனா காலத்தில் நாட்டின் பொருளாதாரம் அழிந்துவிடும் என்று எதிர்க்கட்சியினர் கூறினார்கள். திராவிட கட்சிகள் இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தும் தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை.
மக்கள் நலத் திட்டங்களை தி.மு.க. அரசு அதன் கட்சிக்காரர்களுக்கு வழங்குகிறது. தி.மு.க. அரசு எப்போதுமே வெறுப்பு அரசியலை பின்பற்றி வருகிறது. தி.மு.க., இந்தியா கூட்டணியின் கொள்கை சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவது மட்டுமே. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டபோது தி.மு.க. அதை எதிர்த்தது. சனாதன தர்மத்தை அழிப்போம் என்று மிரட்டுகிறார்கள். காங்கிரஸ், திமுக அரசுகள் எஸ்.சி., எஸ்.டி., பி.சி. பிரிவினருக்கு எதுவும் செய்யவில்லை. எங்களுடைய அரசு 25 கோடி ஏழை மக்களை வறுமைக்கோட்டில் இருந்து மீட்டுள்ளது.
தி.மு.க.வின் தேசியத்துக்கு எதிரான கொள்கையை அகற்றும் தேர்தல் இது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வாரிசு அரசியல், போதைப்பொருள் உள்ளிட்டவை அகற்றப்படும். இந்தியாவில் இருந்து ஊழலை அகற்றும் தேர்தல் இது. அண்ணாமலை, எல்.முருகன் வெற்றியின் மூலம் தமிழகத்தில் புதிய பாதை திறக்கும். அண்ணாமலை, எல்.முருகன் வெற்றி பெற்றால் உங்கள் குரலாக என்னிடம் ஒலிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.