நெல்லை தொகுதி தேர்தலை நிறுத்தி வைக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி
1 min read
Dismissal of case seeking suspension of Nellie constituency election
16.4.2024
திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை ஏற்றதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார் நயினார் நாகேந்திரன். அவர் மீது வன்கொடுமை தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளதாகவும், அதன் விவரங்களை தனது வேட்புமனுத் தாக்கலில் மறைத்து தாக்கல் செய்துள்ளார் என்றும், எனவே அவரது வேட்புமனுவை ஏற்றது செல்லாது என்று அறிவிக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “வேட்புமனுவில் சொத்துவிவரங்களையும் நயினார் நாகேந்திரன் மறைத்துள்ளார். நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவானது முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை. பல குறைபாடுகள் இருப்பதால், வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்று பரிசீலனையின்போது ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், எந்த விசாரணையும் இல்லாமல், அவரின் வேட்புமனு ஏற்கப்பட்டது. இது சட்டவிரோதமானது.
எனவே, வேட்புமனுவை ஏற்றுக்கொண்ட உத்தரவை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும். அதேபோல், தேர்தல் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தனது ஆட்சேபனைக்கு எதிராக விசாரணை நடத்தும்வரை திருநெல்வேலி தொகுதிக்கான மக்களவைத் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, சத்திய நாராயணா அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது, “வாக்குப் பதிவை தவிர தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் முடிந்துவிட்டது. எனவே, தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. மனுதாரர் பாதிக்கப்பட்டிருப்பதாக கருதினால், தேர்தலுக்கு பிறகு தேர்தல் வழக்காக தாக்கல் செய்யலாம்.” என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.