உள் மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு – வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்
1 min read
Chance of summer rains in interior districts – Meteorological Center Director Balachandran
3/5/2024
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் கோடை மழை பெய்ய தற்போதைய நிலவரப்படி வாய்ப்பு இல்லை. உள் மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை மழை வருகின்ற போது வெப்பத்தின் தாக்கம் குறையும். தமிழகத்தில் 6 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். கத்திரி வெயிலை பொறுத்தவரை முதல் ஒரு வாரத்தில் வெப்பம் அதிகரித்து காணப்படும்.
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் இருக்கும். கால நிலை மாற்றம் மட்டுமே வெப்ப அலைக்கு காரணம் இல்லை. நாமக்கல் மாவட்டத்தில் 4 நாட்கள் வெப்ப அலை பதிவாகியுள்ளது. உள் மற்றும் வட தமிழகத்தில் கூடுதல் வெப்பம் பதிவாகலாம். இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வெப்ப அலை அதிகரித்துள்ளது” என்றார்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (03.05.2024 முதல் 06.05.2024 வரை) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
(07.05.2024) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
08.05.2024 மற்றும் 09.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
03.05.2024 முதல் 07.05.2024 வரை: அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இன்று மற்றும் நாளை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3-5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருக்கக்கூடும்.
03.05.2024 முதல் 06.05.2024 வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.