கேரளா செல்லும் கனிமவள வாகனங்களுக்கு இ பாஸ் – ரவிஅருணன் கோரிக்கை
1 min read
For mineral vehicles going to Kerala E-Pass – Request by Ravi Arunan
3.5.2024
ஊட்டி கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு வாகனங்களை கட்டுப்படுத்தவும் போக்குவரத்தை முறை படுத்தவும் இன்று முதல் தமிழக அரசு இ- பாஸ் நடைமுறையை அமல்படுத்தியது போல் தமிழகத்தில் இருந்து தென்காசி நெல்லை குமரி கோவை மாவட்டங்களில் இருந்து கனிம வளங்களை ஏற்றிச்செல்லும் செல்லும் கனரக வாகனங்களுக்கும் இ – பாஸ் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தென்காசி அம்பாசமுத்திரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. ரவி அருணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஊட்டி கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு வாகனங்களை கட்டுப்படுத்தவும் போக்குவரத்தை முறை படுத்தவும் இன்று முதல் தமிழக அரசு இ- பாஸ் நடைமுறையை அமல்படுத்தி இருக்கிறது. இது வரவேற்கத் தக்கது. அதேபோல் தமிழகத்தில் இருந்து தென்காசி நெல்லை குமரி கோவை மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான கனிம வளங்கள் கனரக வாகனங்கள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த கனரக வாகனங்களின் போக்குவரத்தால் திருவனந்தபுரத்திற்கு அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் வண்டிகள் கூட குறித்த நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை.
அதேபோல் இந்த கனரக வாகனங்களின் போக்குவரத்து நெரிசலால் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு செல்பவர்கள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் விமானங்களை தவற விட்டுவிட்டு தவிக்கும் அவலமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது
கனிம வளங்களை எடுத்துச் செல்ல முறையான அனுமதி பெற வேண்டும் என்ற போதிலும் அதில் முழுமையான விபரங்கள் இல்லாமல் கனிமவளத்துறை உதவி இயக்குனரின் கையொப்பத்துடன் வெற்று அனுமதி சீட்டுகளே வழங்கப்பட்டு வருகிறது.
அதில் வாகனங்கள் எங்கிருந்து எங்கு செல்கிறது யாருக்கு அவை கொண்டு செல்லப்படுகிறது? எந்த நேரத்தில் செல்ல வேண்டும் என்ற விவரங்கள் இல்லை.
இதனால் போலி பாஸ் உள்ளிட்ட பலவிதமான முறைகேடுகள் நடந்து அரசுக்கு தினமும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இதை தவிர்க்க சுற்றுலா தலங்களுக்கு வழங்கப்படுவது போல் கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கும் நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று இயற்கை வள பாதுகாப்பு சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழகத்தில் இரவு பகலாக 24 மணி நேரமும் தீவிரமாக இயங்கும் அலுவலகம் கனிமவளத்துறை அலுவலகம் மட்டுமே தற்போதுள்ள நடைமுறையை மாற்றி இ- பாஸ் வழங்குவதன் மூலம் எத்தனை வாகனங்கள்? எவ்வளவு கனிமங்களை கொண்டு செல்கிறது? எந்த ஊருக்கு? யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது? என்ற விவரங்களை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.
மேலும் இந்த நடைமுறையால் எந்த வித முறைகேடுகளுக்கும் இடமில்லாமல் போய்விடுவதால் அரசுக்கும் வருவாய் அதிகரிப்பு ஏற்படும்.
மேலும் இ – பாஸ்களில் பயண நேரம் குறிப்பிட்டு வழங்குவதன் மூலம் போக்குவரத்தையும் முறைப்படுத்தி நெரிசலை தவிர்க்க இயலும்.
ஆகவே கனிம வள வாகனங்களுக்கு இ- பாஸ் கட்டாயம் என்ற நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கே.ரவிஅருணன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்