முஸ்லிம்கள் பற்றி நான் தவறாக எதுவும் பேசவில்லை- பிரதமர் மோடி விளக்கம்
1 min read
I did not say anything bad about Muslims – PM Modi explained
15/5/2024
இந்தியாவில் இஸ்லாமியர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் சதவீதத்தில் முன்னிலையில் இருப்பதாக சமீபத்தில் ஒரு ஆய்வு அறிக்கை தகவல் வெளியானது.
இந்த நிலையில் இது தொடர்பாக பிரதமர் மோடியும் தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசுவதாக தகவல்கள் பரவியது. குறிப்பாக தேர்தல் பிரசார கூட்டங்களில் மத ரீதியாக பிரதமர் மோடி பேசுவதாக பல்வேறு கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்தனர்.
தன் மீதான இந்த குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி விளக்கம் அளித்து உள்ளார். தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டியளித்த அவர் இது தொடர்பாக கூறி இருப்பதாவது:-
நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்கள் பற்றி நான் பேசிய ஒரு பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நான் இஸ்லாமியர்களை மட்டும் குறிப்பிட்டு எதுவும் சொல்லவில்லை. ஆனால் நான் அப்படி பேசியதாக ஒரு தகவல் பரப்பப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் பற்றி நான் தவறாக பேசியதாக பரவிய தகவல் அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்கள் பற்றி நான் பேசினால் அது முஸ்லிம்கள் பற்றி பேசியதாக உங்களுக்கு யார் சொன்னது. நான் அப்படி பேசியது நாட்டில் உள்ள ஏழை மக்கள் பற்றியதாகும்.
எங்கு அதிக வறுமை இருக்கிறதோ அங்கு அதிக குழந்தைகள் இருக்கிறார்கள். இதைதான் நான் குறிப்பிட்டு பேசினேன். அதை தவறாக புரிந்து கொண்டு இஸ்லாமியர்கள் பற்றி நான் பேசியதாக அநீதி இழைப்பது ஏன்?
நான் ஒரு போதும் வாக்கு வங்கி அரசியலுக்காக செயல்படுவது இல்லை. நான் மத ரீதியாக பேச தொடங்கினால் நான் பொது வாழ்க்கையில் இருப்பதற்கு தகுதி இல்லாதவன் ஆகி விடுவேன். நான் ஒருபோதும் அப்படி செயல்படுவது இல்லை.
குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்தை தொடர்ந்து நிகழ்ந்த மிகப் பெரிய கலவரம் உங்களுக்கு தெரிந்து இருக்கும். அப்போது நான் குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்தேன். கோத்ரா கலவரத்துக்கு பிறகு எதிர்க்கட்சிகளால் எனது தனி மரியாதை, இமேஜ் திட்டமிட்டு சீர்குலைக்கப்பட்டது.
என்னை இஸ்லாமியர்களுக்கு எதிரானவன் போல சித்தரிக்கிறார்கள். எனது வீட்டை சுற்றி அதிக அளவில் இஸ்லாமியர்கள் தான் வசிக்கிறார்கள். இஸ்லாமியர்களின் பண்டிகை நாட்களில் எங்களுடைய வீட்டில் உணவு சமைக்கப்படுவது இல்லை. அவர்கள் வீட்டில் இருந்து எங்களுக்கு உணவு வந்து விடும்.
எங்கள் வீட்டை சுற்றி இருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் எங்களுக்கு அடிக்கடி விருந்து தருவார்கள். அவர்களோடு ஒருங்கிணைந்துதான் நான் வாழ்ந்தேன். எனது சிறு வயது வாழ்க்கை அப்படித் தான் அமைந்து இருந்தது.
இப்போது கூட எனக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்துக்கு பிறகு என் மீதான இமேஜ் மாற்றப்பட்டு விட்டது.
இஸ்லாமியர்களில் பெரும்பாலானவர்கள் என்னை புரிந்து கொண்டு இருக்கிறார்கள். நிச்சயம் அவர்கள் எனக்காக வாக்களிப்பார்கள். நான் மத ரீதியாக பேசவில்லை என்பது அவர்களுக்கு புரியும்.
நான் இந்து, முஸ்லிம் பற்றி பேசுவது இல்லை. இதனை எனது வாக்குறுதியாகவே மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.