தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு – வழிகாட்டுதல்கள் வெளியீடு
1 min read
Increase in incidence of dengue in Tamil Nadu – Issue of guidelines
15.5.2024
தமிழகத்தில் திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் சார்பில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் குறித்த விவரங்களை தினசரி பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
சுகாதார மாவட்டம் வாரியாக தொடர்ந்து டெங்கு பாதிப்புகள் குறித்தான விவரங்கள் சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும். இன்புளுயன்சா, மஞ்சள் காமாலை உள்ளிட்ட உள்நோயாளிகள், பொதுவான அறிகுறிகள் உள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.
காய்ச்சல் தொடர்பான மருத்து மாத்திரைகள், தேவையான மருத்துவ உபகரணங்கள், பணியாளர்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கிராம, நகர மற்றும் மாநகர வாயிலாக கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். வீடு வீடாக சென்று கொசுப்புழு ஒழிப்பு பணிகளை மேற்கொள்வதுடன், கொசுப்புழு உற்பத்தியாகாமல் பராமரிக்கிறார்களா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
டெங்கு பாதிப்பு தொடர்பான செயல்பாடு, மருந்து இருப்பு, மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சி, கொசு உற்பத்தியை கட்டுப்படுத்துதல் ஆகியவை குறித்து தினசரி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.