பாபநாசம் அருகே மக்களை அச்சுறுத்திய சிறுத்தை கூண்டில் சிக்கியது
1 min read
A leopard that threatened people near Papanasam was caught in a cage
18.5.2024
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வேம்பையாபுரம் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரது வீட்டில் கட்டிப்போட்டிருந்த ஆட்டை, வனப்பகுதியில் இருந்து இறங்கிய சிறுத்தை வேட்டையாடி தூக்கிச் சென்றது.
இதேபோல் வி.கே.புரம் அருகே அனவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து என்பவரது வீட்டில் இருந்த ஆட்டையும் சிறுத்தை கடித்து தாக்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாபநாசம் வனச்சரகர் சத்தியவேல் தலைமையிலான வனத்துறையினர் தீவிர ஆய்வு செய்து அந்த 2 இடங்களிலும் மோப்பநாய் ‘நெஸ்’ மூலமாக மோப்பம் பிடித்து சிறுத்தை வந்த வழியாக பின்தொடர்ந்து சென்றனர்.
பின்னர் சிறுத்தையை பிடிக்க இரும்புக்கூண்டு வைக்கும் இடத்தை தேர்வு செய்தனர். அதன்படி வேம்பையாபுரம், அனவன்குடியிருப்பு பகுதிகளில் நடமாடிய சிறுத்தையை பிடிப்பதற்காக அங்கு 2 இடங்களில் கூண்டுகளை வைத்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இரவில் கூண்டுகளில் ஆடுகளை கட்டி வைத்து சிறுத்தையின் நடமாட்டத்தை அறிந்து அதனை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்நிலையில் வேம்பையாபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் நேற்று நள்ளிரவில் சிறுத்தை சிக்கியது. இதுகுறித்து அம்பை கோட்ட இணை இயக்குனர் இளையராஜா கூறுகையில், சிறுத்தை ஆக்ரோஷாக இருக்கிறது. அதனை மாஞ்சோலை வனப்பகுதியின் மேலே உள்ள அப்பர் கோதையாறு பகுதியில் கொண்டு சென்று விடுவதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். தொடர்ந்து அந்த பகுதிகளில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.