நெல்லையில் மழை பாதிப்புள்ள இடங்களில் பேரிடர் மீட்பு குழுவினர் முகாம்
1 min read
Disaster recovery team camp in rain affected areas in Nella
19.5.2024
தமிழகத்தில் கோடை மழை பரவலாக பெய்ய ஆரம்பித்துள்ளது. குறிப்பாக நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மாஞ்சோலை, தலையணை, நம்பிகோவில், மணிமுத்தாறு அருவி பகுதிகளுக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மேலும் 5 நாட்களுக்கு நெல்லையில் கனமழை, தென்காசியில் மிக கனமழைக்கான எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதையடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எதிரொலியாக நெல்லை மாவட்டத்தில் மழையால் சேதங்கள் ஏற்பட்டால் உடனே மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் 90 பேர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சென்னையில் இருந்து நெல்லைக்கு நேற்று வந்தனர். இவர்கள் பாளை ஆயுதப்படை மைதானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதற்காக ரப்பர் படகு மற்றும் மரங்கள் விழுந்தால் அதை அகற்ற தேவையான உபகரணங்கள், ஜெனரேட்டார்கள் உள்ளிட்டவைகளையும் கொண்டு வந்துள்ளனர். இந்த குழுவினர் இன்று மழை பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
இதனையொட்டி இன்று காலை முதலே அவர்கள் தங்களுக்கு தேவையான உபகரணங்களை பிரித்து எடுத்துக்கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு புறப்பட்டனர்.