மாறாந்தை சுங்கச்சாவடியை அகற்ற போராட்டம் நடத்ததமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு முடிவு
1 min read
Protest to remove the Maranthai toll booth Tamil Nadu Merchants Association Federation Result
18.5.2024
தென்காசி – திருநெல்வேலி சாலை மாறாந்தையில் அமைக்கப்பட்டுவரும் சுங்கச் சாவடியை அகற்ற தொடர் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் குமரி மண்டலத் தலைவரும், தென்காசி மாவட்டத் தலைவருமான டி.பி.வி.வைகுண்டராஜா தெரிவித்தார்.
ஆலங்குளம் நகர வியாபாரிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம் துத்திகுளம் சாலையில் உள்ள எம்.ஆர்.எஸ். வள்ளி மஹாலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தகூட்டத்திற்கு, ஆலங்குளம் நகர வியாபாரிகள் சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் ஆசீர்வாதம், ஆலங்குளம் டிபிவி மல்டிபிளக்ஸ் உரிமையாளர் டி.பி.வி.கருணாகரராஜா, கார்த்திகா சில்க்ஸ் உரிமையாளர் எஸ்.எம்.டி.இரத்தினசாமி, தொழிலதிபர்கள் கிறிஸ்டோபர், எஸ்.கே.சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க கூடுதல் செயலாளர் செல்வகுமார் வரவேற்றார். ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் ஏ.உதயராஜ், வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் வேலுச்சாமி, சங்க கெளரவ ஆலோசகர் ஜான்ரவி, எம்.ஆர்.எஸ்.வள்ளி மஹால் உரிமையாளர் அண்ணாவி ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்கச் செயலாளர் எம்.முத்துவேல் ஆண்டறிக்கை வாசித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத் தலைவர் கோல்டன் செல்வராஜ் கலந்துகொண்டு பேசினார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கன்னியாகுமரி மண்டலத் தலைவரும், தென்காசி மாவட்டத் தலைவருமான டி.பி.வி.வைகுண்டராஜா பேசியது: பேரிடர் காலங்களில் வணிகர் சங்கங்களின் பேரமைப்போடு இணைந்து, ஆலங்குளம் நகர வியாபாரிகள் சங்கத்தினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்துள்ளனர். மேலும், மாறாந்தை சுங்கச் சாவடியை அகற்ற வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களுக்காக கடைகளை அடைத்து போராட்டம் வெற்றியடையச் செய்துள்ளனர். மாறாந்தை சுங்கச் சாவடியை அகற்றுவதற்காக தொடர் போராட்டம் நடத்தப்படும். உணவு பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து பாதுகாக்க வியாபாரிகளுக்கு பேரமைப்பு எப்போதும் உறுதுணையாக இருக்கும். ஆலங்குளம் வியாபாரிகள் சங்க புதிய கட்டடத்துக்கு தனிப்பட்ட முறையில் நிதியுதவி அளிப்பதோடு, பேரமைப்பு சார்பில் புதிய கட்டடப் பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அவர், ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதி முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் ஹரிசுதனுக்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ரூ.10ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கினார். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர வியாபாரிகள் சங்க கட்டடம் புதுப்பிக்கப்படும். மாறாந்தை சுங்கச் சாவடியை அகற்ற தொடர் போராட்டம் நடத்தப்படும். வணிக கட்டடம் கட்டுவதற்கு தடையாக இருக்கும் ஹாக்கா வனத்துறை சட்டத்தை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு நிரந்தர நிர்வாக அதிகாரியை நியமிக்க வேண்டும். பேரூராட்சி அலுவலக கட்டடத்தை பழைய இடத்திலேயே புதுப்பிக்க வேண்டும். புதிதாக கட்டப்படும் வணிக கட்டடத்திற்கு மின் இணைப்பு பெற பேரூராட்சியில் தடை இல்லா சான்று வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், ராஜேந்திரன் என்ற தாசன், வெங்கடாசலம், வேல்சேகர், அப்பாஸ், கரிகாலன், மயில்ராஜ் உள்பட வியாபாரிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சங்கப் பொருளாளர் குழந்தைவேல் வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்து முடிவில் அனைவருக்கும் நன்றி கூறினார்.