July 5, 2025

Seithi Saral

Tamil News Channel

பழைய குற்றாலம் அருவியை வனத்துறையிடம் ஒப்படைக்க முயற்சியா?

1 min read

An attempt to hand over Old Courtalam Falls to the Forest Department?

19.5.2024
தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் அருவிப் பகுதிகளின் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தை வனத்துறையிடம் ஒப்படைத்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவிவரும் செய்திகளுக்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பழைய குற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் பலியான நிலையில் பழைய குற்றாலம் அருவியை வனத்துறை கட்டுப்பாட்டில் ஒப்படைத்ததாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது.

பழைய குற்றாலம் அருவியில் நேற்று முன்தினம் மதியம் சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பலர் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் நெல்லையைச் சேர்ந்த அஸ்வின் (வயது 17) என்ற மாணவன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் மறு உத்தரவு வரும் வரை பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பழைய குற்றாலம் அருவி பகுதி பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தை மாவட்ட நிர்வாகம் வனத்துறை வசம் ஒப்படைத்து விட்டதாகவும் ஏற்கனவே குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி நிர்வாகம் வனத்துறை வசம் உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது.

ஏற்கனவே தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பல ஆண்டுகாலம் சுற்றுலா பயணிகள் குறித்து மகிழ்ந்து வந்த பழத்தோட்ட அருவியை தோட்டக்கலைத் துறையிடம் இருந்து வனத்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து இன்று அந்த அருவியை நிரந்தரமாக மூடிவிட்டனர்.

மேலும் சிற்றருவி, செண்பகாதேவி ஆகிய அருவிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த வனத்துறையினர் பொதுமக்கள் செண்பகாதேவி அருவிக்கு செல்வதற்கு தடை விதித்ததோடு அங்குள்ள புகழ்பெற்ற செண்பகாதேவி அம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களை கூட அங்கு செல்ல விடாமல் கெடுபிடி செய்து வருகிறார்கள்.

மேலும் குற்றாலத்தில் ஆண்டாண்டு காலமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் பாதுகாப்பாக குளித்து வந்த சிற்றருவியை கைப்பற்றிய வனத்துறை இப்போது அங்கு குளிப்பதற்கு கட்டணம் வசூல் செய்வதோடு அந்த அருவிக்கு செல்லும் பாதையில் நிரந்தர கேட் அமைத்து பூட்டியுள்ள சம்பவமும் நடைபெற்றுள்ளது.

மேலும் நெல்லை மாவட்டத்தில் மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவி, உள்ளிட்ட அருவிப் பகுதிகள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அந்த பகுதியில் உள்ள அருவிகள், கோவில்கள், நீர்நிலைகளுக்கு கூட செல்ல முடியாத அளவிற்கு வனத்துறையினர் கெடுபிடி செய்கிறார்கள். எனவே பழைய குற்றாலம் அருவியை வனத்துறை வசம் ஒப்படைக்க கூடாது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது பற்றி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:- மாவட்ட வனத்துறை சார்பில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பழைய குற்றாலம் அருவி பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும். என்று கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால் அது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை தற்போது வரை பழைய குற்றாலம் அருவிப்பகுதி வனத்துறை வசம் ஒப்படைக்கப்படவில்லை

ஆனால் பழைய குற்றாலம் அருவி பகுதிக்கு மேல் வெள்ளம் ஏற்படும் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சென்சார் கருவிகள் பொறுத்துவது குறித்து வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆய்வு மற்றும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.