பால்கனியில் தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை
1 min read
The mother of the child who was rescued after falling from the balcony committed suicide
19.5.2024
சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் வெங்கடேசன் – ரம்யா. இந்த தம்பதிக்கு 7 மாதமான ஹைரின் என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், கடந்த மாதம் 28-ம் தேதி குழந்தை ஹைரினுக்கு தாய், பால்கனியில் வைத்து உணவு ஊட்டிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக குழந்தை தவறி பால்கனி கூரையில் விழுந்தது.
அப்போது குழந்தை மேற்கூரையிலிருந்து வழுக்கி கீழே விழ இருந்த நிலையில், அப்பகுதி குடியிருப்புவாசிகள் இணைந்து துரிதமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
இந்த நிலையில் அந்த குழந்தையின் தாய் ரம்யா, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த காரமடையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் குழந்தை தவறி விழுந்த சம்பவத்துக்குப் பின்னர் இந்த தம்பதி காரமடைக்கு குடிபெயர்ந்ததாகவும், அங்கு கடந்த சில நாள்களாக கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்த ரம்யா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.