கடையம்- கனிமவள லாரி ஊருக்குள் வர எதிர்ப்பு – மோதல் 3 பேர் கைது
1 min read
Kadayam- Protest against the entry of the mineral truck into the town – Clash 3 people arrested
20.5.2024
தென்காசி மாவட்டம், கடையம் அருகே கனிமவளம் கொண்டு சென்ற லாரியை ஊருக்குள் நுழைய விடாமல் வழி மறித்து பிரச்சனையில் ஈடுபட்ட வழக்கில் லாரி ஓட்டுனர் உட்பட 5 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் 3 பேர்களை கைது செய்தனர் மேலும் இருவரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாலங்கட்டளை அருகே அமைந்துள்ள குவாரியில் இருந்து டிப்பர் லாரிகளில் கனிம வளங்களை ஏற்றி கொண்டு நாலங்கட்டளை வழியாக வருவதால் கிராம சாலைகள் சேதப்படுவதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராஜ், இசக்கியப்பன், செல்வம் மற்றும் உதயகுமார் ஆகியோர் சேர்ந்து அவ்வழியாக வந்த லாரிகளை வழிமறித்து வேறு வழியாக செல்லும்படி கூறியதால் அவர்களுக்கும் லாரியின் உரிமையாளரான சாமுவேல்ராஜா என்பவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அசிங்கமாக பேசி கைகளால் தாக்கி, கால்களால் மிதித்து இரு தரப்பினரும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில் லாரியின் உரிமையாளரான ஆலங்குளம் பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்த சாமுவேல் ராஜா (வயது 45) மற்றும் நாலாங்கட்டளை பகுதியைச் சேர்ந்த அந்தோணிராஜ் (வயது 35), இசக்கியப்பன் (வயது 26), செல்வம் (வயது 42), உதயகுமார் (வயது 42) ஆகிய ஐந்து நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் சாமுவேல் ராஜா, இசக்கியப்பன், உதயகுமார் ஆகியோரை கடையம் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். மீதமுள்ள அந்தோணி ராஜ், செல்வம் ஆகியோரை போலீசார் தொலைபேசி தேடி வருகிறார்கள்.