பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்பு: கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை
1 min read
Bangalore Hotel Blast: NIA in Coimbatore Officials raid
21.5.2024
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி பகுதியில் பிரபல ராமேஸ்வரம் கபே ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி 2 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இந்த சம்பவத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு பயங்கரவாத தாக்குதல் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பான வழக்கு என்.ஐ.ஏ. வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள் குண்டுவெடிப்பில் தொடர்புடைய அப்துல் மதீன் டஹா மற்றும் முசவீர் ஹசன் ஆகிய 2 பேரை கடந்த மாதம் 12ம் தேதி மேற்குவங்காளத்தில் கைது செய்தனர். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஓட்டல் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கோவை சாய்பாபா காலனியில் தங்கியுள்ள 2 டாக்டர்களின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஜாபர் இக்பால் மற்றும் நயிம் சாதிக் ஆகிய இருவரும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் இருவரும் தங்கியுள்ள வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் டாக்டர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.